தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர், பொன்.அமைதி பேட்டி: முன்களப் பணியாளர்களாகிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்க தொகை, 5,000 ரூபாய்; கூடுதல் கடைகளில் பணிபுரிவோருக்கு சிறப்பு ஊக்க தொகையும் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவதாக இருந்தால், அதை கார்டுதாரரின் வங்கி கணக்கு மூலம் வழங்க வேண்டும்.
தமிழக அரசின் நிதி நிலைமை தெரிஞ்சு தான் பேசுறீங்களா...? பொங்கல் பரிசு பணம் எல்லாம், தேர்தல் வந்தா தான் தருவாங்கங்கிறது உங்களுக்கு தெரியாதா?
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்தக் கூடாது என்கின்றனர். தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் மன்னனுக்கு கேடு என சொல்லப்பட்டுள்ளது. தற்போது மன்னர் என்றால் முதல்வர்.
இந்த மாதிரி ஏடாகூடமா பேசி பீதியை கிளப்புறதே உங்களுக்கு வேலையா போயிடுச்சு... தேர்தல்ல தோத்து போன எல்லாருக்கும் பதவி தந்த தலைமை, உங்களுக்கு மட்டும் ஏன் தரலைங்கிறது இப்பத்தானே தெரியுது!
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன? 2011 சட்டசபை தேர்தலை சந்திக்கும்போது தாக்கல் செய்யப்பட்ட அவரது சொத்து மதிப்பு என்ன, 2016 மற்றும் 2021ம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அவரது குடும்ப சொத்து மதிப்பு என்ன என்பதை பட்டியல் இட்டு தெரிவிக்க வேண்டும்.
கே.பி.சுந்தராம்பாள் மாதிரி என்ன என்னன்னு கேட்கப்படாது... ஓடமும் ஒரு நாள் வண்டியில ஏறும்கிற மாதிரி, நாளைக்கு ஆட்சி மாறி, உங்களை பார்த்தும் இதே கேள்வி எழும்பாதுங்கிறது என்ன நிச்சயம்?
மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களில் இறங்கினர். இந்த போராட்டத்தை தடை செய்ய மோடி செய்த வேலைகள் எடுபடவில்லை. இறுதியில் அறிவித்த சட்டங்களை திரும்ப பெற்றார். விவசாயிகள் போராட்டம் மூலம் வரும் 2024 லோக்சபா தேர்தலில் மோடியின் தோல்வி உறுதியாகி உள்ளது.
அடுத்த கட்சி தோல்வியை கணிக்கிறது இருக்கட்டும்... தேர்தலுக்கு தேர்தல், தேய்ஞ்சு போய், லோக்சபாவுல சொற்ப எண்ணிக்கையா குறைஞ்சிட்டே போற உங்க கட்சியை பற்றி சுயபரிசோதனை செய்து பார்க்கலாமே!
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி: பஸ்சின் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் தொங்கி செல்லும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாணவர்களும் அமர்ந்து பயணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தரமான, பழுது இல்லாத பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தா நல்லது... பாதி வழியில 'மக்கர்' பண்ணி, மக்களை பாடா படுத்துற அவலத்துக்கு முதல்ல முற்றுப்புள்ளி வையுங்க...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE