வாராங்கல்-''நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு கழகத்தை அமைக்கவும், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் விடுத்த கோரிக்கை மீது மத்திய அரசு பதில் அளிக்கவில்லை,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்தார்.

தெலுங்கானாவின் வாராங்கல்லில் புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்த நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை மட்டும் காரணம் அல்ல. நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல், பாழடைந்த கட்டடங்களில் அமர்ந்து வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.நீதிமன்றங்களின் கட்டமைப்பை மேம்படுத்த தேசிய அளவிலான நீதித்துறை உள்கட்டமைப்பு கழகத்தை உருவாக்கும்படி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி அளிக்கும்படி மத்திய அரசிடம் விடுத்த கோரிக்கைக்கும் பதில் இல்லை.கிராமப்புறங்களில் போதிய தகவல் தொழில்நுட்ப வசதி இல்லாததால் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வழக்கில் ஆஜராவது வழக்கறிஞர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே கிராமப்புற வழக்கறிஞர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய நடமாடும் 'வேன்'களை அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற கட்டடங்களை சொந்த செலவில் கட்டுவதற்கு பல்வேறு மாநில அரசுகளும் தயங்குகின்றன. அப்படியிருக்கையில் மத்திய அரசு நிதிக்கு காத்திருக்காமல், சொந்த நிதியில் நீதிமன்ற வளாகம் கட்டிய தெலுங்கானா அரசை பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE