புதுடில்லி-தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகையர் ஷில்பா ஷெட்டி, ஷ்ரத்தா கபூர் உட்பட பலருடன் தொடர்பில் இருந்ததை அமலாக்கத் துறை விசாரணையில் ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தருவதாக கூறி, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரகேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.சிறையில் இருந்த போது அங்கு மோசடி வழக்கில் கைதான தொழிலதிபர்கள் இருவருடன் சுகேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஜாமின் வாங்கி தருவதாக கூறி, அவர்களது மனைவியரை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை செயலர் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளை போல பேசி ஏமாற்றி 200 கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார்.இந்த பணத்தை பல்வேறு நாடுகளிலும் போலி நிறுவனங்கள் துவங்கி அதில் முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இவர், பாலிவுட் நடிகையர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசு பொருட்களை அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்தபோது, அவருக்கு ஜாமின் பெற்றுத்தருவது குறித்து, ஷில்பாவை தொடர்பு கொண்டு சுகேஷ் பேசியதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை 2015ல் இருந்தே தனக்கு தெரியும் என்றும், அவர் போதை மருந்து வழக்கில் சிக்கியபோது அவருக்கு உதவியதாகவும் அமலாக்கத் துறை விசாரணையில் சுகேஷ் தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்கும், கேப்டன் இந்தியா என்ற படத்தை இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் விசாரணையில் சுகேஷ் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE