தானே-கர்நாடகாவில் சத்ரபதி சிவாஜி சிலை இழிவுபடுத்தப்பட்டதை கண்டித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக தேசியவாத காங்., தொண்டர்கள் மஹாராஷ்டிராவில் போராட்டம் நடத்தினர்.

மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையில், கர்நாடகாவுக்கு உட்பட்ட பகுதியில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இங்குள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் மீது சில விஷமிகள் மை பூசியதால் எல்லையில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவின் தானே மற்றும் அம்பர்நாத் டவுன்ஷிப் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு தேசியவாத காங்., தொண்டர்கள் நேற்று பால் அபிஷேகம் செய்தனர்.அப்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக போராட்டம் நடந்தது.

பேராட்டத்தின் போது பசவராஜ் பொம்மையின் புகைப்படத்தை தேசியவாத காங்., தொண்டர்கள் கிழித்தெறிந்தனர்.சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ''கர்நாடகாவில் சத்ரபதி சிவாஜி சிலை இழிவுபடுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. மை பூசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்,'' என்றார். இதற்கிடையே, சிவாஜி சிலை மீது மை பூசிய ஏழு பேரை, கர்நாடக போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெலகாவி மாவட்டத்தை மஹாராஷ்டிராவுடன் இணைக்கும்படி, மஹாராஷ்டிரா ஏகிகரண் சமிதி என்ற அமைப்பின் கோரிக்கையால் அதிருப்தி அடைந்த சிலர், சிலை மீது மை பூசியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் காரணமாக இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது.