இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': யுடியூப் பார்த்து பிரசவம், குழந்தை பலி; தாய் சீரியஸ்

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்சீக்கிய கொடி அவமதிப்பு இரு வாலிபர்கள் கொலைசண்டிகர்-பஞ்சாபில் சீக்கிய மத கொடி மற்றும் வாளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, அடுத்தடுத்து இரு இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனர்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமிர்தசரசில் சீக்கியர்களின் புனிதம் வாய்ந்த பொற்கோவில் அமைந்து
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்சீக்கிய கொடி அவமதிப்பு இரு வாலிபர்கள் கொலை

சண்டிகர்-பஞ்சாபில் சீக்கிய மத கொடி மற்றும் வாளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, அடுத்தடுத்து இரு இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமிர்தசரசில் சீக்கியர்களின் புனிதம் வாய்ந்த பொற்கோவில் அமைந்து உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை பிரார்த்தனை நடந்தது. அப்போது 25 வயது இளைஞர் ஒருவர் கோவிலில் சீக்கியர்களின் புனித நுாலான குரு கிரந்த் சாஹிப் இருக்கும் இடத்திற்குள் புகுந்து, அங்கிருக்கும் வாளை எடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த அங்கிருந்தோர் இளைஞரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல் மற்றொரு சம்பவம் நேற்று நடந்தது.

அங்குள்ள கபர்தலா மாவட்டம் நிஜாம்பூரில் சீக்கியர்களின் குருத்வாரா அமைந்துள்ளது.நேற்று அதிகாலை அங்கு வந்த வாலிபர் ஒருவர் நிஷான் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் புனித கொடியை அவமதித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்தோர், இளைஞரை விரட்டிப் பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். மர்ம நபரிடம் தங்கள் முன் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முயன்றனர். அவர்களை தடுத்த பொதுமக்கள், அந்த வாலிபரை அடித்துக்கொன்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹர்வான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்

எல்லையில் ஊடுருவிய சீனர் கைது

மத்வாபூர்: பீஹாரின் மதுபானி மாவட்டம் மதவாபூரில் நேபாள எல்லை வழியாக நேற்று முன்தினம் ஊடுருவிய மர்ம நபரை, அங்கிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் தென்சீன கடற்கரை பகுதியான புஜியான் மாகாணத்தை சேர்ந்த ஜியோ ஜியாங் ஷி என தெரியவந்தது. பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


பஸ் டிரைவருக்கு வலிப்பு: உயிர் தப்பிய பயணிகள்

குன்னுார்:குன்னுார் அருகே, அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டு, உடனடியாக அவர், பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து, 50 பயணிகளுடன், குன்னுாருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. டிரை வர் ராஜேந்திரன் பஸ்சை ஓட்டி வந்துள்ளார். கண்டக்டர் ஜோதிவேல் கடைசி இருக்கையில் அமர்ந்து வந்துள்ளார். பகல், 2:15 மணிக்கு, காட்டேரி பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது, டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. சுதாரித்த டிரைவர் பஸ்சை நிறுத்தி, தனது இருக்கையில் சாய்ந்துள்ளார்.உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, நஞ்சப்பா சத்திரம் பகுதி செவிலியர் மணிமேகலை மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டிரைவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

'யு டியூப்' பார்த்து பிரசவம் குழந்தை பலி; தாய் 'சீரியஸ்'

திருவண்ணாமலை-'யு டியூப்' பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 34; டிப்ளமோ படித்துள்ளார். வீட்டில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி, 28.இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு, சமீபத்தில் நடந்த மருத்துவ சோதனையில், கடந்த 13ம் தேதி பிரசவம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் பிரசவ வலி ஏற்படவில்லை.நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. லோகநாதன், தன் அக்கா கீதா உதவியுடன், 'யு டியூப்' சேனலை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதில், ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அத்துடன் கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது.

இதையடுத்து கோமதியை, புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லோகநாதன் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் முதலுதவி அளித்து, வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எஸ்.ஐ., கொலை வழக்கு கைதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

புதுக்கோட்டை-எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் கொலை வழக்கு கைதி, நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே கடந்த மாதம் 21ம் தேதி அதிகாலை, நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன், 55, ஆடு திருடர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில், தஞ்சை மாவட்டம், தோகூரைச் சேர்ந்த மணிகண்டன், 19 மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மணிகண்டன் ஜாமின் மனுவை, நீதிமன்றம தள்ளுபடி செய்தது.இந்நிலையில், புதுக்கோட்டை எஸ்.பி., நிஷா பார்த்திபன், மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் கவிதா ராமுக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு, திருமயம் கிளை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மணிகண்டன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கண்டக்டர் மீது தாக்குதல்; போதை வாலிபர்கள் கைது

கோவை--கோவையில் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சிங்காநல்லுாரில் இருந்து அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு, பயணத்தை முடித்து ஒண்டிப்புதுார் டிப்போவுக்கு சென்று கொண்டிருந்தது. டிரைவர் மற்றும் கண்டக்டர் கவியரசன், 34 ஆகியோர் மட்டும் இருந்தனர்.வழில் மூன்று வாலிபர்கள் பஸ்சில் ஏறினர். குடிபோதையில் இருந்த வாலிபர்கள், கண்டக்டரிடம் பஸ்சை சூலுார் வரை ஓட்டி செல்ல மிரட்டினர். இதற்கு மறுத்த கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த வாலிபர்கள், கண்டக்டரை சரமாரியாக தாக்கி, கத்தியால் கீறிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து தப்பியோடினர்.

காயமடைந்த கண்டக்டர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி, சிங்காநல்லுாரில் பஸ்களை நிறுத்தி, அரசு பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். கண்டக்டரை தாக்கிய அஜித்குமார், 25, இருகூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மனோஜ், 24 என்பவரை தேடி வருகின்றனர்.

கைவிட்ட காதலன்; காதலி தற்கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த நுாக்காம்பாடியைச் சேர்ந்தவர் ரம்யா, 19. அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் விக்னேஷ், 21. இருவரும் காதலித்து, உல்லாசமாக இருந்தனர். இதில் ரம்யா கர்ப்பமானார். திருமணம் செய்ய விக்னேஷ் மறுத்து விட, மனமுடைந்த ரம்யா, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மங்கலம் போலீசார், விக்னேஷை கைது செய்தனர்.

மகன் கொலையில் தந்தை கைது

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன், 52; விவசாயி. இவரது மகன் சிவமணி, 27; தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கடந்த 16ம் தேதி இரவு தகராறு செய்தார். ஆத்திரமடைந்த கேசவன், வீட்டிலிருந்த கத்தியால் வெட்டியதில் சிவமணி இறந்தார்.தலைமறைவான கேசவனை நேற்று மதியம், உளுந்துார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மகளை தொடர்ந்து தந்தை தற்கொலை

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், பீல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 45; மனைவி, ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகள் ஷாலினி, 21 கடந்த 11ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், செல்வராஜ் மன வேதனையில் இருந்துள்ளார்.நேற்று முன்தினம், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த செல்வராஜ், பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

குடும்ப பிரச்னையால் வியாபராி தற்கொலை

தேனி : தேவாரம் தெற்குத்தெரு பாண்டி 48. இவர் மனைவி பிரியாவுடன் கோவையில் காய்கறி வியாபாரம் செய்தார்.

குடும்ப பிரச்னையால் மனைவியை விட்டு தேனி வந்தார். புது பஸ் ஸ்டாண்ட் அருகே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்தீவிர சிகிச்சையில் உள்ளார். தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


1,300 ஜெலட்டின் பறிமுதல் மூன்று பேர் கைது

பொள்ளாச்சி-பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்த, 1,308 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து, மூன்று பேரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நாட்டுக்கல் பாளையத்தில், பொன்னுசாமி, 50, என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதன் அருகில், காசிப்பட்டணத்தைச் சேர்ந்த விஜயபாபு, 40 என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.ரகசிய தகவலின்படி, இவ்விரு இடங்களிலும் கோமங்கலம் போலீசார் சோதனை செய்தனர். தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1,308 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 100 மீட்டர் திரி பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னுசாமி, விஜயபாபு, கஞ்சம்பட்டியைச் சேர்ந்த கல்குவாரி மேஸ்திரி கனகராஜ் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூறுகையில், 'கல்குவாரிக்கு தேவையான ஜெலட்டின் குச்சி களை, உடுமலையில் உள்ள ஒரு கடையில் பொன்னுசாமி வாங்கி வந்துள்ளார்.'அவற்றை பாதுகாப்பற்ற முறையில் தோட்டத்தில் பதுக்கி வைத்த குற்றத்துக்காக, மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள, கடை உரிமையாளர் செல்வராஜை தேடி வருகிறோம்' என்றனர்.


latest tamil news


போலி மது ஆலைகள் 3 பேர் பிடிபட்டனர்

சென்னை-செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு தொழிற்சாலையை கண்டறிந்து அழித்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், போலி மதுபான தொழிற்சாலைகள் இயங்குவதாக, கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் செயல்படும், மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் களமிறக்கப்பட்டனர்.இவர்கள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு, செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கபட்டினம், அனுப்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி மது தயாரிப்புதொழிற்சாலையை கண்டறிந்து அழித்தனர்.

அத்துடன் அந்த தொழிற்சாலையை நடத்தி வந்த, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயலட்சுமியை கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து 560 லிட்டர் எரிசாராயம்மற்றும் போலி மது தயாரிப்புக்கான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின்படி, செங்கல்பட்டு மாவட்டம் பூந்தண்டலம் பகுதியில் செயல்பட்டு வந்த, மற்றொரு போலி மது தயாரிப்பு தொழிற்சாலையையும் கண்டறிந்து அழித்தனர். அங்கிருந்த எரிசாராயம் மற்றும் போலி மது தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கல்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-டிச-202105:13:48 IST Report Abuse
Taas Vyas இதை அணுக வேண்டிய முறை வேறு-பிரசவத்துக்கு தனியார் மருத்துவ மனைகள் அடிக்கும் கொள்ளையே இதுபோன்ற முட்டாள் தனமான ஆராய்ச்சிகளுக்கு வித்திடுகிறது-டாக்டர் என்பவன் எப்போது இந்தியாவுக்குள் நுழைந்தான்-அதற்கும் பிரிட்டிஷ்காரனையே கைகாட்ட வேண்டும், அதற்கு முன்னர் பிரசவம் நாட்டு மருத்துவச்சிகளாலேயே செய்யப்பட்டது-படிப்படையாக கிறிஸ்துவ சபை மற்றும் பாதிரிகளின் தொண்டூழியப் பித்தலாட்டம் சக மக்களின் சுயதன்னம்பிக்கை மற்றும் துணிச்சலையும் முன்னேற்றத்தையும் தடுத்து அவர்கள் அனுமதிப்பவர்களே தொழில் செய்ய முடியுமெனும் நிலையை ஏற்படுத்தியது-ஏற்கனவே காட்டி கூட்டிக் கொடுத்து பழகிய மான ரோசங்கெட்ட இந்திய ஓநாய்கள் அவர்களின் பட்டங்களைப் பெறத் துடித்தது-முடிவில் மெக்காலே பள்ளிக்கூடம் திண்ணைப் பள்ளியாகிய குருகுலத்தை நலிவடையச் செய்து வெற்றி கண்டது-அதில் படிக்கும் கூமுட்டை கோழிக்குஞ்சாக வெளிவராது-இதுபோல அழுகி நாறும்.
Rate this:
20-டிச-202108:25:37 IST Report Abuse
ஆரூர் ரங்அரசு மருத்துவமனையில் 99.5 சதவீதம் சுகப் பிரசவம்தான். இயற்கை🙄 மருத்துவம் ஹீலர் என்ற பெயரில் போலி மருத்துவர்கள் பேச்சைக் கேட்டு நாசமாகப் போனால் என்ன செய்ய?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X