ஹெல்சின்கி: டெஸ்லா நிறுவன காரின் பேட்டரியை மாற்ற ரூ.17 லட்சம் செலவாகும் என அந்நிறுவனம் கூறியதையடுத்து, பேட்டரிக்கு இவ்வளவு செலவாகுமா என கொதித்தெழுந்த ஒருவர், தன் காரை சுக்குநூறாக வெடிக்க செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தெற்கு பின்லாந்தின் கைமன்லாக்ஸோ பகுதியில் உள்ள ஜாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டூமஸ் கைட்டனன். இவர் கடந்த 2013ல் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவின் 'மாடல் எஸ்' வகை பேட்டரி காரை வாங்கியுள்ளார். அவர் குடியிருக்கும் பகுதிகள் பனிப்பிரதேசம் என்பதால் இதுவரை வெறும் 1,500 கி.மீ மட்டுமே பயணித்துள்ளார். இந்த கார் திடீரென பழுது ஏற்பட்டதால் வாரண்டி கேட்டு நிறுவனத்தை அணுகியுள்ளார். சுமார் ஒரு மாதம் காரை பரிசோதித்த அந்நிறுவன மெக்கானிக்குகள் இந்த காரின் பழுதை நீக்க முடியாது என்றும், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

செலவு குறித்து டூமஸ் கேட்டதற்கு சுமார் 20 ஆயிரம் யூரோக்கள் செலவாகும் எனக் கூறியுள்ளனர். இது இந்திய மதிப்பில் ரூ.17 லட்சமாகும். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த டூமஸ் கைட்டனன், குறைவான கிலோமீட்டரே ஓடிய காருக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என எண்ணி, அந்த காரை வெடிக்கவைக்க முடிவு செய்தார். அதன்படி, காரை எடுத்துவந்த அவர், நண்பர்களின் உதவியுடன் 30 கிலோ டைனமைட் வெடிபொருட்களை காரை சுற்றி கட்டிவைத்ததுடன் டெஸ்லா நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க் உருவபொம்மையை ஹெல்மெட்டுடன் ஓட்டுநர் சீட்டில் வைக்கப்பட்டு வெடிக்க செய்துள்ளார்.

இதனை ஒரு யூடியூப் சேனல் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளார் டூமஸ். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார், சில வினாடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறும் காட்சியை சில மணிநேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பேட்டரி பழுதிற்கு அதிகளவு பணத்தை செலவளிக்க தயங்கியவர், கோடி ரூபாய் மதிப்பிலான காரை வெடிக்க செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE