தி.மு.க.,வைச் சேர்ந்த, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: 'நீட்' தேர்வு வேண்டாம் என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார். ஆனால், ஒரு சில விஷயங்களில், மாநில அரசு முடிவை எடுக்க முடியாது. மாறாக நீட் தேர்வு நடக்காமல் இருப்பதற்கான முயற்சி மேற்கொள்ள முடியும். அதை முதல்வர் செய்கிறார்.ஆட்சிக்கு வரும் முன் இது தெரியவில்லையோ. தேர்தல் பிரசாரத்தின்போது, 'நீட்டை மாநிலத்திலிருந்து வெளியேற்றுவோம்' என, ஆளாளுக்கு சபதம் போட்டீங்களே!
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுகிறார். நடந்து முடிந்த தேர்தலில், 234 தொகுதிகளிலும் பயணித்து மக்களின், அன்பையும், பாசத்தையும் பெற்றவர். அவர் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர், எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது. ஆக மொத்தம், உங்கள் அனுபவத்தில் பாதி கூட இல்லாத, முதல்வரின் வாரிசைக் கொண்டாடினால் தான் கட்சியில் சவுகரியமாக பவிசு, பதவி என நீடிக்க முடியும் என, இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரும் முடிவு செய்து விட்டீர்கள் போலிருக்கு!
காங்., தமிழக தலைவர் அழகிரி பேட்டி: குறிப்பிட்ட ஜாதியை ஆதரிக்கும் கட்சியை காங்கிரஸ் ஆதரிப்பதில்லை. இந்தியர்களை ஹிந்துக்கள், ஹிந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரித்து, 60 ஆண்டுகள் இல்லாத வேறுபாட்டை அரசியல் ரீதியாக பா.ஜ., கட்சி உருவாக்குகிறது. இந்திய அரசியல் சட்டத்துக்கு புறம்பாக, அரசே மதம் பார்க்கிறது. இது போன்ற செயல்களுக்காக, ஜனாதிபதி வலிமையானவராக இருந்தால், இந்த அரசை கலைக்கலாம்.உள்ளூரில் தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு 'சீட்' கூடுதலாக வாங்குவதற்குள், கண்களிலிருந்து கண்ணீர் பெருகி, நாக்கு வெளியே தள்ளி நீங்கள் வேதனைப்பட்ட காலத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இங்கே நீங்கள் உங்கள் கட்சியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொள்வது நல்லது சார்!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: கடந்த 3 வாரங்களாக பார்லிமென்டில் தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வந்து எதிர்க்கட்சியினர் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக செயல்படுகின்றனர். கொரோனாவுக்கு பின் இந்தியாவின் பொருளாதார நிலை படிப்படியாக உயரக்கூடிய சூழலில் பார்லிமென்டில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது அவசியம். விவாதங்கள் நடக்கும்போது பேசுவதற்கான அறிவுத் திறன் குறைவு என்று, தங்களைத் தாங்களே எடை போட்டுக் கொண்டனரோ! அதைத் தவிர்க்கவே, முரண்டு பிடிப்பது, சபையிலிருந்து வெளி நடப்பது போன்ற காரியங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனரோ!
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேச்சு: கோவில் சிலை, தங்கத்தை திருடி 'சஸ்பெண்ட்' ஆன அதிகாரிகள் தற்போது பதவியில் உள்ளனர். இவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கும் வரை பணியில் தொடர அனுமதிக்க கூடாது.'சஸ்பெண்ட்' செய்த நபரே சொன்னாலும், இந்த ஆட்சி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாது. சொந்தக் காசில் சூனியம் வைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, எல்லாம் சரியாகும். காத்திருங்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE