8 போட்டு காட்ட 12 கி.மீ., வெட்டி அலைச்சல்!
''அ.தி.மு.க., ஆதரவு ஆபீசர்ஸ் கொடி தான் பறந்துட்டு இருக்குது பா...'' என, ஏலக்காய் டீயை ருசித்தபடியே பேச ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''செய்தி, மக்கள் தொடர்பு துறையில ஆறு மண்டலங்கள் இருக்குது... இதுக்கு, இணை இயக்குனர்கள் இருக்காங்க... பெரும்பாலும், ஆட்சியில இருக்கிற கட்சியின் ஆதரவு அதிகாரிகள் கொடி தான், இந்த துறையில உயரத்துல பறக்கும் பா...
''ஆனா, இப்ப இருக்கிற ஆறு பேர்ல ரெண்டு பேர் தான் தி.மு.க., ஆதரவாளர்களாம்... அதுலயும் ஒருத்தர், கடந்த 10 வருஷ அ.தி.மு.க., ஆட்சியில, அந்தப் பக்கம் சாய்ஞ்சிட்டாரு பா...
''மீத நாலு பேரும் பக்கா அ.தி.மு.க.,வினர்னு சொல்றாங்க... முன்னாள் முதல்வருக்கு பி.ஆர்.ஓ.,வா இருந்தவர்; ஜெயலலிதா ஆட்சியில முதல்வர்
அலுவலகத்துல இருந்தவருக்கும், இணைஇயக்குனர் பதவி குடுத்திருக்காங்க பா...
''தி.மு.க., ஆதரவு அதிகாரிகளை நியமிச்சா, அவங்க முதல்வருக்கு நெருக்கமாகி, தங்களை ஓரங்கட்டிடுவாங்கன்னு சில உயர் அதிகாரிகள் 'பிளான்' பண்ணி, இப்படி அ.தி.மு.க., ஆதரவாளர்களுக்கு பதவியை வாரி குடுத்திருக்காங்கன்னு துறைக்குள்ள புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''துாண்டில்ல சிக்காம நழுவிட்டாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''காங்கிரஸ், த.மா.கா.,வுல மாநில நிர்வாகியா இருந்தவர் கத்திப்பாரா ஜனார்த்தனன்... இவரது மறைவுக்கு பின், இவரது மகன் விவேக், கட்சி பணிகள்ல ஆர்வம் காட்டாம ஒதுங்கிட்டாருங்க... சமீபத்துல, கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, பிரமாண்ட போஸ்டர்களை
ஒட்டுனாருங்க...
''அதுல முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருந்தாரு... ஆலந்துார் எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான, தா.மோ.அன்பரசன், விவேக்கிடம் பேசி, 'நம்ம கட்சிக்கு வாங்க'ன்னு கூப்பிட்டிருக்காருங்க...
''அவரோ, 'எங்க அப்பா, 50 வருஷத்துக்கும் மேல அரசியல்ல இருந்தும், ஒரு கவுன்சிலர் பதவி கூட அனுபவிக்கலை... எனக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராதுண்ணே'ன்னு நழுவிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''லைசென்ஸ் எடுக்கணும்னா, 12 கி.மீ., அலையணும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''இதென்ன புது கதையா இருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.
''சென்னை செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிய லைசென்ஸ் எடுக்கிறது, வாகன பதிவு உட்பட பல பணிகளுக்கு தினமும், 100க்கும் மேற்பட்டவா வரா...
''செங்குன்றத்துல இருந்து, 12 கி.மீ., தள்ளியிருக்கற வழுதிகைமேடு கிராமத்துக்கு பக்கத்துல போய் தான், வண்டிகளை ஓட்டி காட்டணும் ஓய்... இங்கே போற லேடீஸ், சாலை விபத்து, வழிப்பறியால, நகை, பணத்தை இழந்துடறாங்க...
''இது சம்பந்தமா சோழவரம் போலீஸ்ல புகார் தரதா அல்லது செங்குன்றம் போலீஸ்ல புகார் தரதான்னு எல்லை பிரச்னை வேற நிலவறதால, பலர் புகார் தராமலேயே போயிடறா ஓய்...
''அதிகாரிகள், தங்களது வருவாய்க்காகத்தான் இப்படி, 12 கி.மீ., தள்ளி வச்சிருக்காளாம்... 'எல்லா வசூலையும் அங்கேயே முடிச்சுடறதால, ஆர்.டி.ஓ., அலுவலகத்துல லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியா நுழைஞ்சாலும், ஒரு ரூபாயை கூட பிடிக்க முடியாது'ன்னு புரோக்கர்கள் விஷமமா சிரிக்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE