புதுடில்லி :'உலகின் பல்வேறு நாடுகளில் 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் 'அதிக ஆபத்து' என, வகைபடுத்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு கொரோனா பரிசோதனைக்கான முன்பதிவு கட்டாயம்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னை உட்பட நாட்டின் ஆறு விமான நிலையங்களில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தென் ஆப்பிரிக்காவில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வகை தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 17ம் தேதி மட்டும் 25 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதிஆனது. அங்கு தொற்று பரவல் உறுதி செய்யப்படும் 80 சதவீதம் பேர் ஒமைக்ரான் வகை தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
'ஏர் சுவிதா'
இதையடுத்து தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நம் நாட்டில் நேற்று முன் தின நிலவரப்படி 153 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகி உள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டுஉள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 54 பேருக்கும், டில்லியில் 22, ராஜஸ்தானில் 17 பேருக்கும் ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகி உள்ளது.இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்ரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சேனியா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளை 'அதிக ஆபத்து' உள்ள நாடுகள் பட்டியலில் மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது.இந்த நாடுகளில் இருந்து வரும் பயணியர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
முடிவுகள் வெளியாகும் வரை காத்திருந்து தொற்று இல்லை என்பது உறுதியானால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 'அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள், பயணத்தை துவங்குவதற்கு முன்பே, 'ஏர் சுவிதா' இணையதளம் வாயிலாக விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. 'இந்த ஆறு விமான நிலையங்களிலும் முன்பதிவு நடைமுறையில் பயணியருக்கு சிரமங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின் படிப்படியாக மற்ற விமான நிலையங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரும்' என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.நம் விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர்., மற்றும் 'ரேபிட்' பி.சி.ஆர்., எனப்படும் விரைவு பரிசோதனை செய்யப்படுகிறது.
பாஸ்போர்ட் எண்
ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனைக்கு 500 ரூபாயும் 'ரேபிட்' பி.சி.ஆர்., சோதனைக்கு 3,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை முடிவுகள் 6 - 8 மணி நேரத்திலும், 'ரேபிட்' பி.சி.ஆர்., முடிவுகள் 60 - 90 நிமிடங்களிலும் வெளியாகின்றன. 'அதிக ஆபத்து' என வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து பயணிப்பவர்கள் இந்த பரிசோதனைக்கு கட்டாயம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன் பதிவு செய்தபின், தேதி அல்லது நேரத்தை மாற்றவும், முன்பதிவை ரத்து செய்யவும் முடியும்.மத்திய அரசின் 'ஏர் சுவிதா' இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தின் மேல் பகுதியில் முன்பதிவுக்கான சுட்டி உள்ளது. அதை 'க்ளிக்' செய்து, பெயர், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அளித்து, பரிசோதனைக்கான தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
'பூஸ்டர் டோஸ்'சுக்கு சிறந்த தடுப்பூசி எது?
முன்னணி தடுப்பூசி நிபுணரும், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியருமான டாக்டர் ககன்தீப் கங்க் கூறியதாவது:
அனைவருக்கும் 'பூஸ்டர் டோஸ்' போட தேவையில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆறு மாதங்களுக்கு முன் இரு டோஸ் தடுப்பூசி போட்டக் கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டும் பூஸ்டர் டோஸ் அவசியம் தேவை. பூஸ்டர் டோசில் எந்த தடுப்பூசியை போடுவது என்ற கேள்வி உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் சிறந்த பலனை தருவதற்கான தரவுகள் நம்மிடையே உள்ளன. கோவாக்சின் குறித்த தரவுகள் இல்லை.
உலக அளவிலான தரவுகளை பார்க்கும் போது எம்.ஆர்.என்.ஏ.,தடுப்பூசிகள் பூஸ்டர் டோசில் சிறந்த பாதுகாப்பை அளிப்பது நிரூபணமாகி உள்ளது.இந்த வகை தடுப்பூசிகளை நம் நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அல்லது மஹாராஷ்டிரா வின் புனேவை சேர்ந்த,'ஜெனோவா' நிறுவனம் தயாரிக்கும் எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசிக்கு காத்திருக்க வேண்டும். இதுவும் சிறந்த பலனை அளிக்கும்.
பொதுவாக தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன், அது நமக்கு எத்தனை நாட்கள் பாதுகாப்பு அளிக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ள நிறைய அவகாசத்தை ஆய்வாளர்கள் எடுத்துக் கொள்வர். கொரோனா தடுப்பூசியில் அதற்கான அவகாசம் நம்மிடையே இல்லை. இது எத்தனை நாட்கள் பாதுகாப்பு அளிக்கும் என்பதை அறியும் விதமாகவும் இது வடிவமைக்கப்படவில்லை. எனவே தான் பூஸ்டர் டோஸ் அவசியம் ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.வைரசின் 'ஆர்என்ஏ' எனப்படும் மரபணு குறியீட்டின் சிறிய பகுதியை உடலில் செலுத்துவதன் வாயிலாக அதை செலுத்திக் கொள்பவரின் நோய் எதிர்ப்பு சக்தி துாண்டப்படுகிறது. இந்த வகை தடுப்பூசிகள் 'எம்ஆர்என்ஏ' என அழைக்கப்படுகிறது.அமெரிக்காவின் பைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் எம்.ஆர்.என்.ஏ., வகையை சார்ந்தவை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE