புனே :''கொரோனா பெருந்தொற்று நமக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற பெருந்தொற்று பரவல்களை சமாளிக்க, உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி உள்ளது,'' என, ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்தார்.
'பான்எக்ஸ் - 21'
இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும், 'பான்எக்ஸ் - 21' என்ற பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் கூட்டு பயிற்சி, மஹாராஷ்டிராவின் புனேயில் நேற்று துவங்கியது.இதன் துவக்க விழாவில் பங்கேற்ற ராணுவ தளபதி எம்.எம்.நரவானே பேசியதாவது:கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு பணிகள், நெறிமுறைகள் வகுப்பது உள்ளிட்டவற்றில் பல்வேறு பாடங்களை நாம் கற்றுள்ளோம்.
குறிப்பாக இரண்டாம் அலையின் போது இந்தியாவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்களை நாம் இழந்துள்ளோம்.
முன்னேற்றம்
இதில் தடுப்பூசி விரைவாக தயாரிக்கப்பட்டு, அதை அனைவருக்கும் செலுத்தும் பணி வேகமாக நடந்து வருவது மிகப் பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.இந்த சோதனையான காலக்கட்டத்தில் மருத்துவ உதவி, நிர்வாக தேவைகள் போன்றவற்றில் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் உதவிகள் செய்ததை பார்த்தோம். பெருந்தொற்று பரவல் தணிவதற்காக இயற்கை பேரிடர் காத்திருக்காது என்பதையும் நம் நாடு நன்கு அறிந்து வைத்துள்ளது. எனவே இரண்டு பேரிடர்கள் ஒரே நேரத்தில் தாக்கும் போது, மக்களை பாதுகாக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இதற்கு உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு மிக அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.