ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு சட்ட மசோதா வெற்றி; லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம்| Dinamalar

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு சட்ட மசோதா வெற்றி; லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம்

Updated : டிச 22, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (44) | |
வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா - 2021, நேற்று(டிச.,20) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.தேர்தல் மீதான மக்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, தேர்தல் சட்டங்களில் நான்கு வகையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர, தேர்தல்
 ஆதார், வாக்காளர் அட்டை, இணைப்பு, சட்ட மசோதா, வெற்றி

வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா - 2021, நேற்று(டிச.,20) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.


தேர்தல் மீதான மக்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, தேர்தல் சட்டங்களில் நான்கு வகையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர, தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.


பரிந்துரை


'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்; புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இது, ஆண்டுக்கு நான்கு முறையாக அதிகரிக்க வேண்டும்.
'பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள், சொந்த ஊருக்கு வந்து ஓட்டளிக்க முடியாத பட்சத்தில், அவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவி ஓட்டளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர் ஓட்டளிக்க, சட்டத்தில் இடமில்லை. இனி, கணவர்களுக்கும் அந்த உரிமையை அளிக்க வேண்டும்.'ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு எந்த இடத்தையும் பயன்படுத்திக் கொள்ள கூடிய அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும்' ஆகிய நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது.

இதையேற்று, 'தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா - 2021'ஐ, மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்தது. இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதை, பார்லிமென்டில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு
திட்டமிட்டது. எனினும், பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், குளிர்கால கூட்டத்தொடரின் பல நாட்கள் வீணாகின.

இந்நிலையில் நேற்று காலை லோக்சபா கூடியவுடன், எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட்டன.


எம்.பி.,க்கள் நோட்டீஸ்


'தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த விவகாரம் குறித்து, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, விவாதம் நடத்த வேண்டும்' என தமிழக எம்.பி.,க்கள் 'நோட்டீஸ்' அளித்திருந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில், விவசாயிகள் பலியான சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மற்றும் திரிணமுல் எம்.பி.,க்கள் கோரி இருந்தனர்.ஆனால், இந்த கோரிக்கைகளை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்து, கேள்வி நேரத்தை தொடர அனுமதியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.சபை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்தன.

இதற்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அதற்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பேசுகையில், ''பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல், பொதுச் சமூகத்திடம் ஆலோசனை பெறாமல், அவசர கோலத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.

காங்கிரசின் சசி தரூர் கூறுகையில், ''ஆதார் எண் என்பது முகவரிக்கான அட்டை மட்டுமே. அது குடியுரிமை அட்டை கிடையாது. ஆதாரைக் கேட்பதன் வாயிலாக, அனைத்து விபரங்களையும் அரசு தெரிந்து கொள்ளப் பார்க்கிறது,'' என்றார்.


திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சவுகதா ராய் பேசுகையில், ''ஆதார் அட்டையை அரசு வழங்குகிறது. தேர்தல் நடைமுறை என்பது சுதந்திரமானது. அப்படியானால், தேர்தல் நடைமுறைகளுக்குள் அரசு தலையிடுகிறதா என தெரிய வேண்டும்,'' என்றார்.

காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ''மக்கள் மீது வலுக்கட்டாயமாக இச்சட்டத்தை திணிக்கக்கூடாது. இதனால் அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படும். இம்மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். நிலைக்குழுவின் ஒப்புதலை பெற்று, மசோதாவை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதில் அளித்து, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடத்த, மத்திய அரசு விரும்பியது. ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியால், அது நடக்காமல் போய்விட்டது. இந்த மசோதா மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. தேவையற்ற அச்சத்தை கிளப்புகின்றனர். தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்புவோரிடம் மட்டுமே, தேர்தல் அதிகாரி ஆதார் எண்ணை கேட்பார். இதை கட்டாயமாக்காமல், தன்னார்வ அடிப்படையில் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவால், தேர்தல் நடைமுறைகளில் மேலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியும். ஆதார் எண் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு, எந்த வகையிலும் இந்த மசோதா எதிரானதாக இல்லை.பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்த அம்சங்கள், இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதால், மசோதாவை மீண்டும் ஆய்வு குழுவுக்கு அனுப்ப தேவையில்லை.இந்த மசோதா, கள்ள ஓட்டு மற்றும் போலி வாக்காளர்களை நிச்சயம் தடுக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா - 2021 லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக துணை மானியக் கோரிக்கை மசோதாவும் இதே முறையில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.அமளி

இந்த மசோதா இன்று ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், பிற்பகல் 2 மணிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.பிற்பகல் அவை கூடிய போது, இந்த மசோதாவை பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. இது குரல் ஓட்டெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், பா.ஜ., ஓய்எஸ்ஆர் காங்., ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பீஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாக நடைமுறைக்கு வரும்

-நமது டில்லி நிருபர் -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X