சென்னை ;நம் நாளிதழில் வெளியான கதையை சுட்டிக்காட்டி, ''தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையதாகும்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.
புனிதப் பயணம்
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள, 'ஏழைகளின் சிறிய சகோதரிகள்' அமைப்பின் முதியோர் இல்லத்தில், அ.தி.மு.க., சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பன்னீர்செல்வம் பேசியதாவது:கிறிஸ்துவ மக்களுக்கு, எம்.ஜி.ஆர்., பல்வேறு சலுகைகளை வழங்கினார். இஸ்ரேல் புனிதப் பயணம் செல்லும் திட்டத்தை, ஜெயலலிதா துவக்கி வைத்தார். பழனிசாமி முதல்வராக இருந்த போது, புனிதப் பயணம் செல்வதற்கான கட்டணத்தை உயர்த்தி வழங்கினார்.
இன்று காலை, 'தினமலர்' நாளிதழ் படித்த போது, 'கிறிஸ்துமஸ் சிந்தனைகள்' என்ற தலைப்பின் கீழ், 'மனம் திருந்துங்கள்' என்ற செய்தி, என் கண்ணில் பட்டது. அதைக்கூற கடமைப்பட்டுள்ளேன்.ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல், அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்து கொடுத்தார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான்.
வருத்தப்பட்டான்
ஒரு முறை அந்த ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன், பிழைப்புக்காக பக்கத்து ஊருக்கு சென்றான். அங்குள்ள விவசாயிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிட, தவிடு கூட கொடுக்க வில்லை. பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லை கேட்காமல், அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான்.
விருந்து கொடுத்தார்அவன் மனம் திருந்தி வந்தது, தந்தையை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்காக, அவர் தன் ஊழியர்களுக்கு விருந்து கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்க வில்லை; தந்தையை கடிந்து கொண்டான். இந்த கதையை சொன்ன இயேசு சொல்கிறார்...'நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களையும், மனம் திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாகவே இருப்பர்.
'ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே, நல்ல தலைமைக்கு ஏற்புடையதாகும்' என கூறியதாக, 'தினமலர்' நாளிதழில் வந்துள்ளது.அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, கிறிஸ்து வர்களுக்கு உறுதுணையாக இருந்தோம்; தற்போதும் இருக்கிறோம்; என்றும் இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு பிரார்த்தனை
இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசுகையில், ''கிறிஸ்துமஸ் வருகிறது என்றால், அனைவர் மனதிலும் உற்சாகம் பிறக்கும். டிசம்பர் 24 இரவு உலகம் முழுதும் மக்கள் அமைதியுடன் ஒற்றுமையாக வாழ, சிறப்பு பிரார்த்தனை நடத்துவர். ''கிறிஸ்துவர்களுக்கு அ.தி.மு.க., என்றென்றும் உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.
'சசிகலாவுக்கு பொருந்தாது'
கிறிஸ்துமஸ் விழா முடிந்ததும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. இதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுதியாக உள்ளனர். அவர்கள் ஒப்புதலோடு, சசிகலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம். பன்னீர்செல்வம் கூறிய கதை, சசிகலாவுக்கு பொருந்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE