கோவை;உக்கடம் மேம்பாலப் பணிக்கு தடையாக இருந்து வந்த, 'டோபிகானா' நேற்று இடிக்கப்பட்டது. சலவை தொழிலாளர்கள், புல்லுக்காடு மைதானத்தில் புதிதாக கட்டியுள்ள சலவையகத்துக்கு இடம் பெயர்ந்தனர்.உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, 'டோபிகானா' (சலவையகம்) இருந்தது. 78 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். அதன் மத்தியில் துணி துவைக்க தண்ணீர் தொட்டி, கற்கள் போடப்பட்டிருந்தன.
மேம்பாலப் பணிக்காக, இதை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) மூலமாக, புல்லுக்காடு மைதானத்தில், ஆடு அறுவைமனைக்கு பின்புறமுள்ள இடத்தில், ரூ.8 கோடியில், 96 வீடுகளுடன், 'ப' வடிவில்,புதிதாக சலவையகம் கட்டப்பட்டது.78 சலவை தொழிலாளர் குடும்பத்தினர், அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் இருவர், முத்தண்ணன் குளக்கரையில் வசித்த, 16 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்பட்டது.மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பில், சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் கட்டிக் கொடுக்கப்பட்டது. பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, உக்கடம் 'டோபிகானா'வில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சலவை தொழிலாளர்கள் புதிய வீட்டுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், பழைய 'டோபிகானா' நேற்று இடித்து அகற்றப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்த கட்டமாக, சி.எம்.சி., காலனி குடியிருப்பு மற்றும் மீன் மார்க்கெட் இடித்து அகற்றப்படும்' என்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'மூன்று துாண்களுக்கு துளையிட்டு விட்டோம்; நான்காவது துாணுக்கு துளையிட வேண்டும். 'கட்டட இடிபாடுகளை அகற்றி, இறங்கு தளம் அமைப்பதற்கான வேலையை துவங்க இருக்கிறோம். 'வாலாங்குளம் ரோட்டில் உள்ள உயரழுத்த மின் ஒயர்களை புதைவடமாக கொண்டு செல்ல, மின்வாரியத்தினரிடம் பேசி வருகிறோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE