திருப்பூர்;'மழை குறைந்து விட்டதால், ஒரு மாதத்துக்குள் டெங்கு பாதிப்பு குறைந்து விடும். இருப்பினும், தண்ணீரை காய்ச்சி குடிப்பதை பொதுமக்கள் தொடர வேண்டும்,' என, சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.கடந்த மாதம் முதல் வாரம் திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு துவங்கியது.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து பாதிப்பு பதிவாகியதால், சுகாதாரத்துறை 'மஸ்துார்' நியமித்து கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட்டது. இருந்த போதும், டிச., துவக்கத்தில் தொடர் மழை பெய்ததால், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.அதே வாரம் மங்கலம், சுல்தான்பேட்டை பகுதியில், 12 வயது சிறுவன் டெங்குவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். மாநகராட்சி மட்டுமின்றி, புறநகரிலும் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில், 25 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சிட்கோ, முதலிபாளையம், அவிநாசி உள்ளிட்ட, 13 'ஹாட்ஸ்பாட்' கண்டறியப்பட்டு, டெங்கு பாதித்தவர் வசித்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அங்கு வசித்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் மூலம் 'மாஸ்கிளினீங்' செய்யப்பட்டது.தொடர் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு சற்று ஓய்ந்துள்ளது. தற்போது, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், டெங்கு வார்டில், 21 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில், 40க்கும் அதிகமானோர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பரிசோதனைக்கு மூலம் புதியதாக டெங்கு காய்ச்சல் உறுதியாகிறவருக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு, எதிர்ப்பு சக்திக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.டெங்கு தடுப்பு பணிகள் குறித்து, சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:மழை பெய்தால் தேங்கும் நன்னீரில் இருந்து டெங்குவை பரப்பும் லார்வா, 'ஏடிஸ்' கொசு உருவாகிறது. ஒரு வாரமாக மழை ஓய்ந்துள்ளது. தேங்கி நின்ற இடங்களில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மழை குறைந்து விட்டதால், ஒரு மாதத்துக்குள் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் வரும்.இருப்பினும், குடிநீரை காய்ச்சி குடிப்பதை பொதுமக்கள் தொடர வேண்டும். ஒவ்வொருவரும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். உடல் நல குறைபாடு இருந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE