சென்னை,:ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையத்தை அரசுடைமையாக்க கையகப்படுத்தியது செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், சென்னையில் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் தொடர்ச்சியாக, வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தியது.விசாரணைஅரசின் நடவடிக்கையை எதிர்த்தும், வேதா நிலையத்தை ஒப்படைக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, அரசின் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து, வேதா நிலையத்தின் சாவிகளை இருவரிடமும் ஒப்படைக்கும்படி, சென்னை கலெக்டருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோமயாஜி வாதாடியதாவது:நினைவு இல்லம் அமைப்பது பொது நோக்கமா, இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு தான் உள்ளது. அரசின் தனிப்பட்ட அதிகார வரம்பில் தலையிட முடியாது. ஆறு முறை முதல்வராக ஜெயலலிதா இருந்தார். மக்களின் நலனுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்.மெரினாவில் நினைவிடம் இருக்கிறது என்பதற்காக, அவரது வீட்டை நினைவு இல்லமாக்க தேவையில்லை என்று கூற முடியாது. ராஜாஜி, காமராஜருக்கு இரண்டு இடங்களில் நினைவிடங்கள் உள்ளன.சாவிகள் ஒப்படைப்புவேதா நிலைய சாவிகள் ஒப்படைக்கப்படுவதற்கு முன், மேல்முறையீடு செய்யப்பட்டு விட்டது. உடனடியாக கலெக்டருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பின், சாவிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் வாதாடினார்.தீபக் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடியதாவது:உயர் நீதிமன்ற தீர்ப்பை அரசு ஏற்று விட்டால், அதை எதிர்த்து அரசியல் கட்சி மேல்முறையீடு செய்ய முடியாது. கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கில் விசாரணை நடப்பது தெரிந்தும், அதில் அ.தி.மு.க., தரப்பு இணைய முயற்சிக்கவில்லை.நினைவிடம்மெரினாவில் 'மியூசியம், டிஜிட்டல்' காட்சி என 80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொது மக்கள் பணத்தில் 70 கோடி ரூபாய்க்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டுமா?நினைவு இல்லம் அமைப்பது பொது நோக்கமா, இல்லையா என்பதை முடிவு செய்ய, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. தற்போது சாவிகள் ஒப்படைக்கப்பட்டு, எங்கள் வசம் இல்லம் உள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.தீபா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதாடியதாவது:தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்யவில்லை. கையகப்படுத்தியதில் நடைமுறை தவறுகள் உள்ளன. சட்டத்துக்கு புறம்பாக கையகப்படுத்தப்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன.பிரதான இடத்தில், 11 கிரவுண்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது. பொது மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என டிவிஷன் பெஞ்ச் உத்தரவும் உள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் வாதாடியதாவது:மறைந்த முதல்வரின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரி இருவர் வழக்கு தொடர்ந்த போது, அவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என அ.தி.மு.க., தரப்பில் மறுக்கவில்லை.மறுபரிசீலனைநினைவு இல்லமாக மாற்ற, பொது மக்கள் பணத்தை செலவிடுவதற்கு பதில், மக்கள் நலனுக்கு செலவிடவும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யவும் டிவிஷன் பெஞ்ச் கூறியிருந்தது. மேலும், 'ஒரு நினைவிடம் உள்ள போது, மற்றொன்று தேவையில்லை' என்றும் தனி நீதிபதி உத்தரவில் கூறப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி சாவிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அத்துடன் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது.இவ்வாறு அவர் வாதாடினார்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE