புதுடில்லி : ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் ஆஜராக நீதிமன்றம் விலக்கு அளித்தது.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் சிதம்பரம்.குற்றப்பத்திரிகைஇவர் 2006ல் ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களின் ஒப்பந்தத்திற்கு அந்நிய நேரடி முதலீட்டு வாரிய விதிகளை மீறி ஒப்புதல் அளித்ததன் வாயிலாக, குறிப்பிட்ட நபர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர், சிதம்பரம், அவரது மகனும் லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி, அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.வழக்கில் சிதம்பரம், கார்த்தி ஆகியோர் முன்ஜாமின் பெற்று உள்ளனர்.
வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதையடுத்து சிதம்பரம் உள்ளிட்ட எதிர்தரப்பினர், நேற்று நேரில் ஆஜராக நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பியது.
இதன்படி டில்லியின் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி ஆஜரானார். முன்னதாக திட்ட மிட்ட பல்வேறு வேலைகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால், நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
மனு தாக்கல்
இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், வழக்கில் சிதம்பரம், கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்து முறையாக ஜாமின் பெற வேண்டும் என கூறினார்.மேலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க வேண்டும் என, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE