விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உறுதி தன்மையற்ற அனைத்து வகை பள்ளிகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் சமையல் கூடங்கள் இடித்து அகற்றப்படும் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில், கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்தனர். இதன் எதிரொலியாக, உறுதி தன்மையற்ற பள்ளிகளை ஆய்வு செய்து, இடித்து அகற்ற அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, விழுப்புரம் அடுத்த பாப்பனப்பட்டு ஊராட்சி சாமியாடி குச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பலமிழந்த கட்டடத்தை, இடிக்கும் பணியை கலெக்டர் மோகன் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது:மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகள் 1,115, நடுநிலைப் பள்ளிகள் 267, உயர்நிலைப் பள்ளிகள் 187, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 205 என மொத்தம் 1,814 பள்ளிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை இழந்த பள்ளி கட்டடங்கள், கழிவறைகள், சுற்றுச் சுவர் மற்றும் பயன்பாட்டில் இல்லாத சேதமடைந்த கட்டடங்கள் குறித்து விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் 14 வட்டார கல்வி அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.இக்குழுவினர் 601 பள்ளி கட்டடங்கள், சமையல் கூடங்கள் மற்றும் கழிவறைகள் இடிக்கப்பட வேண்டிய மிகவும் பழைமை வாய்ந்த கட்டடங்கள் என அறிக்கை அளித்துள்ளனர்.அதன்படி, கட்டடங்கள் குறித்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்களைக் கொண்டு கட்டடங்களின் உறுதி தன்மையை சரிப்பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக 59 கட்டடங்கள் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சாமியாடி, குச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வலுவிழந்த கட்டடம் இடித்து அகற்றும் பணி நடக்கிறது.மேலும், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பழுதடைந்த கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் செல்லாதபடி, உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி மாணவர்களின் நலனில் மிகவும் கவனமுடன், பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.
திட்ட இயக்குனர் சங்கர், தாசில்தார் இளவரசன் பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, சேர்மன் சங்கீதா அரசி ரவி துரை, டி.இ.ஓ., சுந்தரமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, பள்ளி தலைமை ஆசிரியை தேவகி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி துரை, ஊராட்சித் தலைவர் ராஜாங்கம், ஊராட்சி செயலாளர் கமலக்கண்ணன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE