கொச்சி: தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பீட்டர் மயிலிபரம்பில் இரு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதற்கான சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதை எதிர்த்து கேரளா உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், 'நான் பணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதற்கான சான்றிதழில் என் தனிப்பட்ட விபரங்கள் மட்டுமே இருக்கலாம். பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பது தனிநபரின் உரிமைகளுக்குள் தலையிடுவதாக உள்ளது' எனக் கூறியிருந்தார்.

கடந்த டிச.,13ம் தேதி நடந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிபதி பி.வி.குன்கி கிருஷ்ணன், 'மோடி நமது நாட்டு பிரதமர், அமெரிக்க பிரதமர் அல்ல. மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மோடி ஆட்சிக்கு வந்துள்ளார். சான்றிதழில் உங்கள் பிரதமரை பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்,' என மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இன்று (டிச.,21) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'இது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு. மேலும், மனுதாரருக்கு இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம். இதனால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை 6 வாரத்திற்குள் கேரள சட்ட சேவைகள் ஆணையத்திடம் வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE