புதுடில்லி: அடுத்த ஆண்டு பட்ஜெட்- குறித்து திட்டமிட பிரதமர் மோடி தொலைத்தொடர்பு, சுகாதாரம், மின்னணு தொழில்நுட்பம், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். நிபுணர்களிடம் மேற்கண்ட துறைகளின் வளர்ச்சி குறித்து பிரதமர் கேட்டறிந்தார். கடந்த வாரம் இதேபோல தனியார் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் புதிய லாபகரமான முதலீடுகளை ஈர்க்க தேவையான முக்கிய திட்டங்கள் குறித்து திட்டமிட்டார்.

தற்போது கட்டுமானம், வாகன தயாரிப்பு, வாடிக்கையாளர் சேவை பொருட்கள், ஆடை தயாரிப்பு, மறு சுழற்சி, தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துறைசார் நிபுணர்கள் பங்கு கொண்ட கூட்டத்தில் எதிர்கால வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிந்த அவர், அதற்கேற்ப அடுத்த ஆண்டு பட்ஜெட்டை திட்டமிட முடிவெடுத்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் அவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் கூட்டம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சர்வதேச அளவில் இந்திய வர்த்தகம் மேம்பட கடந்த 2014ம் ஆண்டுமுதல் மத்திய பா.ஜ., அரசு பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உலக அளவில் பல்வேறு பொருட்களின் தயாரிப்பின் கூடமாக இந்தியாவை மாற்ற தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக மின்னணு உதிரி பாகங்கள், வாகன தயாரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு உதவித் தொகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சர்வதேச முதலீட்டாளர்களை இந்தியா வசம் ஈர்க்க இயலும்.
மேலும் எதிர்காலத்தில் இதன்மூலமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்தால் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனை தொலைநோக்கு இலக்காக வைத்து தற்போது மத்திய பா.ஜ., அரசு இந்தக் கூட்டங்களை நடத்தி வருகிறது.