எம்.ஜி.ஆரின் ஆத்மா மன்னிக்காது!
ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அக்டோபர் 17, அ.தி.மு.க.,வின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.கடந்த, 1972ல், அ.தி.மு.க., துவக்கிய போது எம்.ஜி.ஆர்., உடன் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், ஹண்டே, துரைசாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட விசுவாசிகள் நின்றனர்.
கடந்த 1973ல் இருந்து, எம்.ஜி.ஆர்., மறையும் வரை, அ.தி.மு.க., தோல்வியே சந்திக்கவில்லை. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு சரியவே இல்லை.ஆனால், அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவின் வருகை நிகழ்ந்த போது, கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின், ஜெயலலிதா - ஜானகி என பிளவு நிகழ்ந்தது. அப்போது, 'வீடியோ கேசட்' கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவும், அவரின் கணவர் நடராஜனும் தந்திரமாக, ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றனர்.
ஜெயலலிதாவின் கைகளுக்கு அ.தி.மு.க., வந்ததும் சுதாகரன், இளவரசி, தினகரன், திவாகரன், பாஸ்கரன் என, 'மன்னார்குடி' குடும்பமே, கட்சியை கபளீகரம் செய்தது. கும்பகோணம் மகாமக குளத்தையும், வளர்ப்பு மகன் திருமணத்தையும் மறக்க முடியுமா? சசிகலா சகவாசத்தால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
ஜெயலலிதா, சசிகலாவின் ஆசிர்வாதத்துடன் தான், பன்னீர்செல்வம் முதல்வரானார். ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு பின், சசிகலாவால் தான் பழனிசாமி முதல்வரானார்.
பன்னீர்செல்வமும், பழனிசாமியும் இணைந்து, சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என தெரிந்ததும், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் எல்லைமீறி நடந்தது.
தேர்தலில், அ.தி.மு.க., தோற்றது. இப்போது கட்சியில், 'குடுமிபிடி' சண்டை நடக்கிறது. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் நிலை, இன்றைக்கு பரிதாபமாக இருக்கிறது. நாடு விடுதலை பெற்றதும், காங்கிரசை கலைத்து விட வேண்டும் என்று காந்தி சொன்னதைப் போல, எம்.ஜி.ஆரும் இப்படியெல்லாம் நடக்குமென உணர்ந்திருந்தால் அ.தி.மு.க.,வையும் கலைக்கச் சொல்லியிருப்பார்.கட்சியை படுகுழியில் தள்ளும் நபர்களை எல்லாம், எம்.ஜி.ஆரின் ஆத்மா மன்னிக்கவே மன்னிக்காது.
ஒரே ஒரு கேள்வி தான்!
ஆர்.கணேசன், சென்னை, அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்த தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் லோக்சபாவில்
தெரிவித்துள்ளார்.மோசடியில் ஈடுபட்ட தமிழக அரசு அதிகாரிகள் கைதானதும், 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததும் பெரிய விஷயமே இல்லை.அந்த அதிகாரிகள், திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், உண்மையான தண்டனையை, அவர்கள் அனுபவித்து இருப்பர். அங்கு, அவர்களுக்கு உரிய 'சிகிச்சை' மேற்கொள்ளப்பட்டு இருக்கும்.
ஆனால் அந்த மோசடி அதிகாரிகள், சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் கட்டில், மெத்தை, வீட்டுச் சாப்பாடு, மொபைல்போன் என, சகல வசதியுடன் ஓய்வெடுத்து கொண்டிருப்பர்.அரசு பணத்தில் முறைகேடு செய்து, விவசாயிகளின் நலத்திட்டத்தில், 'ஆட்டை'யைப் போட்டோர் அல்லவா? அவர்களை நன்கு கவுரவிக்காமல் விட்டால் நன்றாக இருக்குமா?தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோர் மீது ஒரு புதுவிதமான தண்டனை முறையை கடைப்பிடிக்க துவங்கி உள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் செய்து சிக்கிக் கொள்பவர், முதற்கண் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அடுத்து ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு மறுவாழ்வும், பதவி உயர்வும் கொடுத்து, அழகு பார்ப்பார்.வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை, தண்டனை என எதுவும் அவர்களுக்கு கிடையாது. கழகங்களின் ஆட்சியில் இது போன்று நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.ஊழல் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டால் தான், ஆச்சரியம் மற்றும் அதிசயம்!இதே நிலைமை நீடித்தால், லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு, விருது வழங்கி கவுரவிப்பரோ என்னவோ?
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் ஒரே ஒரு கேள்வி தான்...மத்திய அரசின் விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கும் தண்டனை கிடைக்குமா?
இந்நிலை என்று மாறும்?
மரகதம் சிம்மன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், முந்தைய ஆட்சியை விமர்சிப்பதிலேயே காலம் தள்ளுகிறது.சமீபத்தில் பெய்த பருவமழையால், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும் பகுதி வெள்ளக் காடாகியது.வான் கொடுத்த பல டி.எம்.சி., மழை நீர் அனைத்தும் வீணாகி, கடலில் கலக்கிறது. இரு திராவிட கட்சிகளும், ஆட்சியில் இருக்கும் போது, மழை நீரை சேகரிக்க ஓர் அணை கூட
கட்டவில்லையே...முல்லைப்பெரியாறு, காவிரி, கிருஷ்ணா நதி என, அண்டை மாநிலங்கள் தண்ணீர் தரவில்லை என்று அங்கலாய்க்கிறோமே தவிர, கொட்டும் மழை நீரை வீணாக்குவது குறித்து, கொஞ்சமும் நாம் கவலைப்படவில்லை!தமிழகத்தில் இன்னும் சில அணைகளை கட்டுவோம் என்ற எண்ணம், ஆட்சியாளர்களுக்கு ஏன் தோன்றவில்லை?கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் அதை தடுத்து நிறுத்த போராடுகிறோம்; ஆனால் நாம் அணை கட்ட மறுக்கிறோம்.'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும்' என்ற வள்ளுவர் வாக்கை, ஆட்சியாளர்கள் யோசிக்கவே இல்லை.
தற்போதும், 'அம்மா' உணவகம், 'அம்மா கிளினிக்' ஆகியவற்றின் பெயரை மாற்றலாமா என்று யோசிக்கின்றனரே தவிர, மழை நீரை எப்படி சேமிக்கலாம் என்று தொலைநோக்கு சிந்தனைக்கு இடம் கொடுக்க மறுக்கின்றனரே!கோடையில் வாடிய பயிரை கண்டு வாடினோம்; மழைக்காலத்தில், நீரில் மூழ்கிய பயிரைக் கண்டு வருந்தினோம். இந்த அவல நிலை என்று மாறும்?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE