பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: அடுத்த ஆண்டிற்கான 'நீட்' தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படக்கூடும். அதற்கு முன்பாக, அடுத்த ஆண்டில் தமிழகத்தில் நீட் உண்டா, இல்லையா என்பதை தமிழக அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும்.'நீட்' கிடையாது என, தமிழக அரசு எப்படி சார் அறிவிக்க முடியும்? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீற முடியுமா? பழுத்த அரசியல்வாதியாகிய நீங்களே, இந்த வயதிலும் இப்படி குழம்பித் தவிக்கிறீர்களே! அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, அறிக்கை தயாரிக்கும் பணியில் கவனம் செலுத்துங்கள். அது தான் உங்கள் சிறப்பு!
சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுந்தரேஷ் பேச்சு: வரும் காலங்களில் விவாகரத்து, குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.கடமை உணர்வுடன் எச்சரித்து, வழக்குகள் உருவாகாமல் இருக்க, பெற்றோரும், வீட்டில் உள்ள பெரியவர்களும் முயல வேண்டும் என்பதை உணர்த்தி விட்டீர்கள். முயற்சி செய்வரா?
இன்ஜி., கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் அமைப்பான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் தத்தாத்ரேய சகஸ்ரபுதே பேச்சு: தற்போது இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன. எனவே, 2024ம் ஆண்டு வரை, புதிதாக இன்ஜி., கல்லுாரிகள் தொடங்கத் தேவையில்லை.கையில் காசிருக்கிறது; அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று தான் கல்லுாரி தொடங்கும் பணக்காரர்கள் நினைக்கின்றனரே தவிர, சமூகத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. அதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பும் உடந்தையாக இருக்கிறது என்பது தான் வேதனை. இப்போது பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது. கடிவாளம் போடுங்களேன்!
மத்திய தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேட்டி: பார்லிமென்ட் செயல்படக் கூடாது என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது. அவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காகவே, அரசு சார்பில் நேற்று முன்தினம் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதையும் அவர்கள் புறக்கணித்து விட்டனர்.'எம்.பி.,க்கள் யாரும் 'ஆப்சென்ட்' ஆகக் கூடாது; அப்படி ஆனால், சம்பளம் 'கட்' செய்யப்படும்; தொகுதி நிதி 'கட்' செய்யப்படும்; அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது' என்பன போன்ற கடுமையான சட்டங்கள் அமலானால், ஒரு நாள் கூட விடாமல், பார்லி., சபைகளில், 'கப்சிப்' என அமர்வர். அமல்படுத்துவீர்களா?
மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் பேச்சு: கடந்த 2019, நவம்பர் 30 முதல் இந்தாண்டு நவம்பர் 29 வரை, ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், 5,601 முறை பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறி தாக்கியுள்ளது. அப்படி எனில், எங்கே தொய்வு ஏற்படுகிறது? நம் பாதுகாப்பில் குளறுபடியா... எதிர்க்கட்சிகளின் பாக்., ஆதரவு செயல்பாடுகளா? கண்டுபிடித்து, 'நறுக்' செய்வது நல்லது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE