எதிர்க்கட்சி புள்ளிக்கு உதவிய ஆளுங்கட்சி புள்ளி!
''மாமூல் அதிகாரி பத்தி பேசினோமுல்லா... அவரை மாத்திட்டாவ வே...'' என்றபடியே வந்தார் அண்ணாச்சி.
''நாம நிறைய பேரை பத்தி பேசுறோம்... நீங்க யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''சென்னை, தாம்பரத்துல சட்டம் - ஒழுங்கு போலீஸ் எஸ்.ஐ.,யா இருந்தவர் கார்த்திகேயன்... இவர், மாநகர காவல் சட்டப்பிரிவு, 75ன் கீழ் பதிவு செய்யும் வழக்குகள்ல 3,000ல இருந்து, 5,000 வரைக்கும் அபராதம் போட்டு, 'கல்லா' கட்டுதார்னு நாம பேசினோமுல்லா...
''இது சம்பந்தமா உயர் அதிகாரிகள் நடத்துன விசாரணையில, நாம பேசியது சரிதான்னு தெரியவந்துட்டு... இதனால, எஸ்.ஐ., கார்த்திகேயனை, ஆவடி சிறப்பு காவல் படைக்கு மாத்திட்டாவ வே...''
என்றார் அண்ணாச்சி.
''எப்ப தான் காலியிடங்களை நிரப்ப போறாங்கன்னு தெரியலை பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''மதுரை மாவட்டத்துல, சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் ஆயிரத்துக்கு மேலா காலியா கிடக்குது... இதனால, ஒரு அமைப்பாளர் ரெண்டு, மூணு மையங்களை கவனிக்க வேண்டியிருக்குது பா...
''அ.தி.மு.க., ஆட்சியில 2017ம் வருஷத்துல இருந்து பல முறை இந்த பணிகளுக்கு விண்ணப்பம் குடுத்து, நேர்காணல் நடத்தியும், அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் ஆளாளுக்கு சிபாரிசு பட்டியல் குடுத்ததால, நியமனங்களையே ஒத்தி வச்சுட்டாங்க பா...
''இப்ப, ஆட்சி மாறிட்ட சூழல்ல சத்துணவு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து, அறிவிப்பு வெளியானது... ஆனா, திடீர்னு அந்த அறிவிப்பையும் ரத்து பண்ணிட்டாங்க... இதனால, கூடுதல் வேலைப்பளுவால பலரும் திணறிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் கதையை கேளுங்கோ...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகி ஒருத்தர், சமீபத்துல தன் மகனோட பல்லடம் ரோட்ல, கார்ல போயிண்டு இருந்தார்... டி.கே.டி., சந்தைப்பேட்டை பக்கத்துல ஒரு கார் குறுக்கே நின்னதால, 'ஹாரன்' அடிச்சிருக்கார் ஓய்....
''அங்க, போக்குவரத்துக்கு இடையூறா சிக்கன் கடை வச்சிருந்த மூணு பேர், தகராறு பண்ணி, தி.மு.க., நிர்வாகியையும், அவரது மகனையும் தாக்கியிருக்கா... ரெண்டு பேரும் மருத்துவமனையில மூணு நாள் 'டிரீட்மென்ட்' எடுத்துட்டு ஆத்துக்கு திரும்பியிருக்கா ஓய்...
''இது சம்பந்தமா, தி.மு.க., நிர்வாகி தரப்பு தெற்கு போலீஸ்ல புகார் தந்தும், நடவடிக்கை இல்லை... விசாரிச்சா, தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர், அ.ம.மு.க., பிரமுகர் என்பதும், அவருக்கு ஆதரவா, தி.மு.க., முக்கிய புள்ளி இருக்கறதும் தெரிய வந்திருக்கு ஓய்...
''ஒருபக்கம் சொந்த கட்சி நிர்வாகிக்கு ஆதரவா பேசிண்டே, மறுபக்கம் எதிர்க்கட்சி பிரமுகருக்கு ஒத்தாசை பண்ண பிரமுகர் மேல, கட்சிக்காராள்லாம் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''நாகராஜன் வர்றாருல்லா... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE