புதுக்கோட்டையை சேர்ந்த சத்யராஜ்: பிறந்து வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டைக்கு பக்கத்துல உள்ள விச்சூர் கிராமம். ரொம்பவே கஷ்டப்படுகிற குடும்பம் தான். கஷ்டப்பட்டு தான் பி.எஸ்சி.,யும், எம்.சி.ஏ.,வும் படித்தேன்.படிப்பு முடிந்ததும் சென்னையில் ஐ.டி., வேலை. அந்த வேலையில் பெரிதாக விருப்பம் இல்லை. சொந்தமா பிசினஸ் செய்யணும்ங்கிறது தான் ஆசை.என் காலேஜ் நண்பர் கோபிநாத்தை சந்தித்ததில், அவர் தான் 'ஆன்லைன் பிசினஸ்' சம்பந்தமான பல ஐடியாக்களை கொடுத்தாரு. அவர் கொடுத்த ஐடியாவில் உருவானது தான், 'சேவகன் ஆப்!' இதை செய்து கொடுத்ததும் அவர் தான்.மற்றவர்களுக்கு சேவை செய்றதுக்கு தான் நாம் இருக்கோம்ங்கிற அர்த்தத்துல, என் நிறுவனத்திற்கு சேவகன்னு பெயர் வைத்தேன். கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரை முதலில் வேலைக்கு எடுத்தேன்.'பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்'னு 'சேவகன் ஆப்' பத்தின கார்டு, மெசெஞ்சர், சலுகைன்னு போட்டு, இதை 'இன்ஸ்டால்' செய்ய வைத்தேன். இதற்கு பின் ஓட்டல்களை தேடிப் போக ஆரம்பித்தேன். சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து, ஓட்டல்களை தேர்வு செய்தேன். பொதுவாக, கஸ்டமர் விரும்பும் சிறு சிறு ஓட்டல்கள், மற்ற 'ஆப்'பில் இருக்காது; ஆனால், அந்த ஓட்டல்களையும் சேர்க்க ஆரம்பித்தேன். அதனால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட, 100 ஆர்டர் வருது. தற்போது, புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த மார்க்கெட்டில் இருந்து, பிரஷ்ஷா மீன் வாங்கி, வாடிக்கையாளர்களிடம் கொடுக்கிறோம். மீன் விற்பனை ரொம்ப நல்லா போயிக்கிட்டு இருக்கு. அதே மாதிரி, சிக்கன், மட்டன் கறி எல்லாமே வீடு தேடிப் போய் கொடுக்கிறோம். காய்கறியோ, பழமோ விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர்கள் விலை வைப்பதில்லை; அதனால், சரியான விலை கிடைப்பதில்லை. உற்பத்தி செய்யும் பொருட்கள் இடைத்தரகர்களிடம் சேர்ந்து, பின் மக்களுக்கு கிடைப்பதால், விவசாயிகளுக்கு லாபம் இல்லை. இந்நிலையை மாற்றி விவசாயிக்கும், மக்களுக்கும் இடையே, 'ஆப்' மூலம், இடைத்தரகராக இல்லாமல், பாலமாக இருந்து விவசாயிக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யணுங்கிறது தான், நீண்ட நாள் ஆசை; அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறேன்.நீங்கள் செய்யும் தொழிலை நேர்த்தியுடன், சிறப்பாக செய்தால் போதும்; உங்கள் போட்டியாளர்களை பற்றி, நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE