சபரிமலை : சபரிமலையில் டிச. 26ல் நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று(டிச.,22) காலை ஆரன்முளாவிலிருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது.
சபரிமலையில், கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தினமும் ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்படுகிறது.
டிச. 26 பகல், 11:50 முதல் 1:15 மணிக்குள் மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கி காணிக்கையாக வழங்கியிருந்தார். ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி இன்று காலை பவனியாக எடுத்து வரப்படுகிறது.
இன்று அதிகாலை, 5:00மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் தங்க அங்கி, 7:00 மணிக்கு சபரிமலை கோவில் போன்று வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் புறப்படும். டிச.25- மதியம் 1:00 மணிக்கு பம்பையையும், மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியையும் வந்தடையும். அன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அணிவிக்கப் பட்டிருக்கும்.
இதையொட்டி சபரிமலை, பம்பையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீசன் தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பம்பை ஆற்றில் தற்போது குறைந்த அளவு தண்ணீரே செல்வதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்க 150 கூடுதல் பஸ்கள் வரவழைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் பெருவழிப்பாதையில் பயணிக்கலாம்