உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.கணேசன், சென்னை, அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்த தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட தமிழக அரசு அதிகாரிகள் கைதானதும், 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததும் பெரிய விஷயமே இல்லை. அந்த அதிகாரிகள், திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், உண்மையான தண்டனையை, அவர்கள் அனுபவித்து இருப்பர். அங்கு, அவர்களுக்கு உரிய 'சிகிச்சை' மேற்கொள்ளப்பட்டு இருக்கும். ஆனால் அந்த மோசடி அதிகாரிகள், சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் கட்டில், மெத்தை, வீட்டுச் சாப்பாடு, மொபைல்போன் என, சகல வசதியுடன் ஓய்வெடுத்து கொண்டிருப்பர்.

அரசு பணத்தில் முறைகேடு செய்து, விவசாயிகளின் நலத்திட்டத்தில், 'ஆட்டை'யைப் போட்டோர் அல்லவா? அவர்களை நன்கு கவுரவிக்காமல் விட்டால் நன்றாக இருக்குமா? தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோர் மீது ஒரு புதுவிதமான தண்டனை முறையை கடைப்பிடிக்க துவங்கி உள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழல் செய்து சிக்கிக் கொள்பவர், முதற்கண் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அடுத்து ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு மறுவாழ்வும், பதவி உயர்வும் கொடுத்து, அழகு பார்ப்பார்.
வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை, தண்டனை என எதுவும் அவர்களுக்கு கிடையாது. கழகங்களின் ஆட்சியில் இது போன்று நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஊழல் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டால் தான், ஆச்சரியம் மற்றும் அதிசயம்! இதே நிலைமை நீடித்தால், லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு, விருது வழங்கி கவுரவிப்பரோ என்னவோ? மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் ஒரே ஒரு கேள்வி தான்... மத்திய அரசின் விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கும் தண்டனை கிடைக்குமா?