கொடைக்கானல்: கொடைக்கானல் ஆனந்த கிரியில் நீடிக்கும் அவல நிலையை சரிசெய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலா நகரான கொடைக்கானலின் மையத்தில் உள்ளது ஆனந்தகிரி. இங்கு 7 தெருக்கள் உள்ளன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியில் பல அடிப்படை வசதிகள் இல்லை.
அடிக்கடி மின்தடை, அனுமதியற்ற காட்டேஜ்கள், எரியாத தெருவிளக்கு, திறந்தவெளி சாக்கடை, வடிகால் வசதி இல்லை, ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் தெருக்கள், ரோடு சேதம், பார்க்கிங் வசதியின்றி தெருவில் நிற்கும் வாகனங்கள் என ஆனந்தம் தராத எல்லா குறைகளும் குவிந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் நளினி, ஜேக்கப், ராஜூ, மீனா ஆகியோர் கூறியதாவது:தெருக்கள் ஆக்கிரமிப்பு
இங்குள்ள தெருக்களில் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி அனுமதி பெற்று கட்டடங்கள் கட்டிய கட்டடங்களும், எல்லையை மீறுவதால் தெருக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீதிகள் சுருங்கி வருகிறது. எந்த வாகனமும் எளிதாக சென்று திரும்ப முடிவதில்லை. தாழ்வான பகுதியான ஆனந்தகிரியில் மேடான பகுதியில் உள்ள காட்டேஜ், தங்கும் விடுதிகள், குடியிருப்புகளின் செப்டிக் டேங்குகள் இரவு நேரங்களில் திடீரென திறக்கப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
சமீபத்தில் சீரமைக்கப்பட்ட ரோடு சேதமடைந்து வாகனங்கள் தடுமாறுகின்றன. அடிக்கடி பல மணி நேர மின்தடை ஏற்படுவதால் அன்றாடப் பணிகள் பாதிக்கின்றன. மின்வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தெருக்களில் இளைஞர்கள் மாலை நேரங்களில் அமர்ந்து பெண்களை கேலி செய்து வந்தனர். போலீசில் புகார் அளித்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குறைந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்களில் தங்கி செல்வோர் அட்டகாசம் முகம் சுளிக்க வைக்கிறது.
செப்டிக் கழிவால் பாதிப்புதேவையான பகுதியில் தெருவிளக்கு அமைக்காமல் வீடுகளின் முன்பு விளக்குகள் எரியும் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் பிறபகுதிகள் இருள் சூழ்ந்துள்ளது. சமீபத்தில் அமைத்த சிமென்ட் ரோடும் சிதிலமடைந்துள்ளது.
இவற்றை 12 வது வார்டு பொதுநல சங்கம் மூலமே பிரச்னைகளை சரி செய்து கொள்கிறோம். மூன்றாவது தெருவில் திறக்கும் செப்டிக் கழிவுகளால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகிறோம். ஓராண்டுக்கு முன் மின்கட்டணம் சீராக இருந்தது. தற்போது குளறுபடிகள் ஏற்பட்டதால் ஐந்து மடங்கு கட்டணம் உயர்வு ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனந்தகிரி தாழ்வான பகுதி என்பதால் கனமழை காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்து விடும். அப்போதெல்லாம் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
முறையான சாக்கடை வசதி இல்லாமல், செடி, கொடி முளைத்துள்ளதால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. அண்ணா நகர், இந்திரா நகரில் இருந்து வரும் கழிவு நீரால் வெகுவாக பாதிக்கப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE