திண்டுக்கல்: புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி திண்டுக்கல்லில் 18 வண்ணங்களில் கோலப்பொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.பண்டிகை காலம், மார்கழி மாதத்தில் பெண்கள் வீட்டின் முன்பு வண்ணப் பொடியால் கோலம் போடுவது வழக்கம். அதனால் மார்கழி மாதம், பொங்கல் வரை வண்ண கோலப்பொடி விற்பனை ஜோராக நடக்கும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் சட்டாம்பிள்ளை சந்தில் வண்ண கோலப்பொடி தயாரிக்கும் பணி மும்முராக நடக்கிறது.
அங்கு சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்ச் என 18 வகை வண்ணங்களில் கோலப் பொடி தயாரிக்கின்றனர். இங்கிருந்து உள்ளூர் மட்டுமின்றி மதுரை, கோவை, சேலம் மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். மணலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கோலமாவில் வண்ணம் கலந்து வண்ண கோலப்பொடி தயாரிக்கின்றனர். சில்லறை விற்பனையில் 200 கிராம் பாக்கெட் ரூ.4 க்கு விற்பனை செய்கின்றனர்.
தயாரிப்பாளர் ஜோதி கூறியது: கொரோனாவால் கடந்தாண்டு விற்பனை பாதித்தது. இம்முறை மணல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வால் கோலப்பொடி விலையும் அதிகரித்துள்ளது. அதனால் கடந்தாண்டை விட தயாரிப்பை சற்று குறைத்துள்ளோம். கோலம் போடும் கலாசாரம் மாறாததால் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். செயற்கை கோல வார்ப்புகள் அதிகம் இருந்தாலும் கையால் வார்க்கும் கோலத்திற்கு தனி அழகு உண்டு, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE