பல்லடம்: பல்லடம் அருகே, உயிருடன் உள்ளவரை இறந்ததாக கூறி, ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் - சாமளாபுரம் பேரூராட்சி, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி, 52; விசைத்தறி உரிமையாளர். ஆதார், ரேஷன் கார்டில் இவரது பெயர் திடீரென நீக்கப்பட்டது.
இது குறித்து, அவர் கூறியதாவது: ரேஷன் கார்டில் பொருள் வாங்க கடைக்கு சென்றேன். எனது பெயர் நீக்கப்பட்டு விட்டதாக விற்பனையாளர் தெரிவித்தார். இதனால், இலவச புகார் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நான் இறந்துவிட்டதாகவும் அதனால் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் அட்டையிலும் பெயர் நீக்கப்பட்டதை அறிந்தேன். உயிரோடு இருக்கும் நான் இறந்து விட்டதாக கூறி, ஆதார், ரேஷன் கார்டில் திடீரென பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இது குறித்து, பல்லடம் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 'முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. வேலுசாமியின் ரேஷன் கார்டும் அவ்வாறு தவறுதலாக நீக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE