தமிழக நிகழ்வுகள்
மாட்டு வண்டியில் சிக்கி சிறுவன் பலி
பெரணமல்லுார் : பெரணமல்லுார் அருகே, தந்தை ஓட்டிய மாட்டு வண்டியில் சிக்கி சிறுவன் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அடுத்த அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் அருணாசலம்; மாட்டு வண்டி தொழிலாளி. இவரது மகன் தினேஷ்குமார், 11. அதே பகுதி அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை அருணாசலம், தினேஷ்குமார் இருவரும் தங்கள் தேவைக்காக, செய்யாற்று படுகை அன்மருதை கிராமத்தில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர். தினேஷ்குமார், மணல் மீது படுத்து வந்தார்.பெரணமல்லுார் பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, தினேஷ்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், மாட்டு வண்டி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த அவர், ஆரணி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உடுமலையில் மண் கடத்தல் அமோகம் : போலி ஆவணங்கள் பயன்படுத்தி துணிச்சல்
உடுமலை : உடுமலையில் தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில், நுாற்றுக்கணக்கான லோடு கிராவல் மண் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, குறிச்சிக்கோட்டை - எலையமுத்துார் ரோடு, தும்பலப்பட்டி கரடு பகுதியில், தனியார் நிலத்தில், சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது.கன ரக வாகனங்களில் அள்ளப்பட்டு, தினமும், 30க்கும் மேற்பட்ட லாரிகளில், நுாற்றுக்கணக்கான லோடு கிராவல் மண் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மடத்துக்குளம் தாலுகா சீலநாயக்கன்பட்டியிலுள்ள, கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டை, போலியாக பயன்படுத்தி கிராவல் மண் அள்ளப்படுகிறது. மடத்துக்குளம் தாலுகா மெட்ராத்தி பகுதியிலும், கடந்த ஒரு மாதமாக, பல அடி ஆழத்துக்கு, இதே போல் முறைகேடாக மண் அள்ளப்பட்டு வருகிறது.அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
உடுமலை தாசில்தார் ராமலிங்கத்திடம் கேட்ட போது, ''பர்மிட் ஆய்வு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கால்வாயில் தவறி விழுந்து கண்டக்டர் பலி
கம்பம்: கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் 58, அரசு பஸ் நடத்துனர். நேற்று நண்பரைப் பார்க்க டூவீலரில் நகரின் மேற்குப் பகுதியான புதுகுளம் பகுதிக்கு சென்றுள்ளார். திரும்பி வரும் போது 18ம் கால்வாயில் தவறி விழுந்து பலியானார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரிக்கின்றார்.

மிரட்டிய திருடர்கள் கைது
திண்டுக்கல்: மாலப்பட்டி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குமரன் திருநகர் ராஜகோபால் 19, என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த சரவணன் 37, அஸ்கர் மீரான் 16 ஆகியோரை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
ராணுவ உடையில் வழிப்பறி செய்தவன் கைது
சோழவரம் : ராணுவ உடையில் வந்து, லாரி டிரைவரிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் சதிஷ்குமார், 34; லாரி டிரைவர்.
இவர், கடந்த 19ம் தேதி, கேரளாவில் இருந்து, லாரியில் ரப்பர் ஏற்றி, நேற்று முன்தினம் சோழவரம் வந்தார். லோடு இறக்குவதற்கு முன், ஜனப்பசத்திரம் சாலையில் உள்ள தனியார் எடை மேடைக்கு சென்றார்.அங்கு ராணுவ உடையில் இருந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, சதிஷ்குமாரிடம் இருந்த, 3,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது குறித்து, சதிஷ்குமார் உடனடியாக சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த வழிப்பறி திருடனை பிடித்தனர்.பிடிபட்ட நபர், ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம், கல்பூரா மல்கோ பகுதியை சேர்ந்த சத்யவீர், 23, என்பதும், ராணுவ உடையில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. சத்யவீரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை பெற்றெடுத்த சிறுமி; முதியவருடன் தாயும் கைது
கொருக்குப்பேட்டை, : கொருக்குப்பேட்டையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், முதியவர் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை, போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ், 51. இவர், தன் நண்பர்களான பஷீர், ஜமால் ஆகியோருடன் சேர்ந்து, 17 வயது சிறுமியை, அடிக்கடி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.கருவைக் கலைக்க, சிறுமியின் தாயிடம் 5,௦௦௦ ரூபாய் கொடுத்தார்
துரை ராஜ். ஆனால், கருவைக் கலைக்க முடியாத சூழ்நிலையால், சிறுமி சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்தார்.தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், சிறுமி புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் நேற்று, 'போக்சோ'வில் துரைராஜை கைது செய்ததோடு, சிறுமியின் தாயையும் சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள பஷீர், ஜமால் ஆகியோரை தேடி வருகின்றனர்.
போலீசாரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.75 லட்சம்
சென்னை:போலீசாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுாரை அடுத்த டி.மண்டபம் கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த காசி என்பவரை 2011 நவம்பரில் திருக்கோவிலுார் போலீசார் அழைத்து சென்றனர்.பின் இரவு 8:00 மணிக்கு அவரது மனைவி மாமனார் குமார் சகோதரிகள் இருவர் சகோதரர்கள் படையப்பா மாணிக்கம் என ஆறு பெண்கள் உட்பட 14 பேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அதில் நான்கு பெண்களை தைலாபுரம் தோப்புக்கு அழைத்து சென்று மானபங்கம் செய்ததாக கூறி திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன். சிறப்பு எஸ்.ஐ. ராமநாதன் தலைமை காவலர் தனசேகரன் காவலர்கள் பக்தவத்சலம் கார்த்திகேயனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் விழுப்புரம் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையமும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:இரவு நேரத்தில் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறி ஆறு பெண்களை அடைத்து வைத்ததுடன் ஆண்களையும் தாக்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க வேண்டும்.சம்பவத்தில் தொடர்புடைய போலீசாருக்கு எதிரான துறை ரீதியிலான நடவடிக்கையை மூன்று மாதங்களில் முடித்து டி.ஜி.பி. உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
காவல் துறையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
மாணவிக்கு காதல் டார்ச்சர்
விழுப்புரம் : காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை தாக்கிய மாணவர், அச்சத்தில் தனது கையை பிளேடால் கிழித்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
விழுப்புரம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, வளவனுார் பகுதியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர், மாணவியை வழி மறித்து, தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து மாணவியை தாக்கினார்.
தனது பெற்றோரிடம் கூறி போலீசில் புகார் கொடுப்பதாக மாணவி கூறியுள்ளார்.இதனால், அச்சமடைந்த மாணவர் தனது கையை பிளேடால் கிழித்துக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.வளவனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாயசத்தில் மயக்க மருந்து கலந்து மூதாட்டியிடம் நகை 'ஆட்டை'
ராயபுரம் : பாயசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மூதாட்டியிடம் ௩ சவரன் நகையை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ராயபுரம், பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கனகாம்பாள், 85. வீட்டில் தனியாக வசிக்கிறார்.
கடந்த ௩ம் தேதி, அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்குச் சென்ற போது, பத்மாவதி, 53, என்பவர் பழக்கமாகி உள்ளார்.பின், உதவி செய்வது போல நடித்து, கனகாம்பாள் வீடு வரை வந்து, இவர் தனியாக இருப்பதை அறிந்து நோட்டம் பார்த்துள்ளார்.கடந்த 7ம் தேதியன்று, மீண்டும் கனகாம்பாள் வீட்டிற்கு சென்று, தனக்கு திருமண நாள் எனக்கூறி ஆசிர்வாதம் வாங்கி, பாயசம் கொடுத்துள்ளார்.
அதை அருந்திய கனகாம்பாள் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த ௧ சவரன் வளையல், ௨ சவரன் செயின் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினார்.பின், கனகாம்பாள் மயக்கமடைந்து இருப்பதை பார்த்த அவரது மகள் ஷியாமளா, அவரை எழுப்பி விசாரித்த போது, நடந்ததை கூறியுள்ளார்.புகாரின்படி, ராயபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடினர்.
அதில், ராயபுரம் காளிங்கராயன் தெருவைச் சேர்ந்த பத்மாவதி, 53, சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் போலீசாரிடம் கூறியதாவது:என் கணவர் உடல் நலமின்றி இருந்தும், மகன் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்தார். இதனால் நகை முழுவதையும் அடகு வைத்தேன். அந்த நகையை மீட்க திருடினேன். இவ்வாறு அவர் கூறினார்.நகையை கைப்பற்றிய போலீசார், பத்மாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய நிகழ்வுகள்
கொலை மிரட்டல் ரவுடிக்கு வலை
வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த உறுவையாறு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன், 40; விவசாயி.கடந்த 12ம் தேதிகோர்க்காடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான பாட்டில் மணி
தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவிந்தனிடம், எங்கள் ஊரில்பயிர் செய்வதால் மாமூல் தரவேண்டும் என, கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்த கோவிந்தனை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து கோவிந்தன் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, ரவுடி பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
ரூ.3 கோடி மோசடி வழக்கு நிதி நிறுவன உரிமையாளர் கைது
புதுச்சேரி:கவர்ச்சி திட்டங்களை அறிவித்து 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன உரிமையாளரை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட ரபேல் டிஜிட்டல் ஓ.பி.சி. பப்ளிஷர் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை அலுவலகம் நெல்லித்தோப்பில் கடந்த ஆண்டு முதல் இயங்கி வந்தது. இதை புதுச்சேரியைச் சேர்ந்த ஜேக்கப் வருண் பிரவீன் 36 நடத்தி வந்தார். ரபேல் நிறுவனத்தில் 50 ஆயிரம் முன்பணம் செலுத்தி இருந்தார்.
கிளை அலுவலகம் நடத்த ஜேக்கப்புக்கு மாதம் 15 ஆயிரம் சம்பளம் நிறுவனத்தில் டிபாசிட் செய்வோர் பணத்தில் கமிஷன் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனால் தன் குடும்பத்தினரை நிதி நிறுவன திட்டத்தில் சேர்த்து 26.93 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார்.
மேலும் வில்லியனுார் கரிக்கலாம்பாக்கம் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 2500 பேர் 3 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.ஆரம்பத்தில் லாபத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் திடீரென பணம் நிறுத்தப்பட்டது. பல முறை நிறுவனத்திடம் கேட்டும் பணம் வரவில்லை.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜேக்கப் சி.பி.சி.ஐ.டி. போலீசில் கடந்த மாதம் 10ம் தேதி புகார் அளித்தார்.
போலீசார் ரபேல் நிறுவன உரிமையாளர் திருத்தணியைச் சேர்ந்த சிவநரேந்திரன் 36; வெளி தொடர்பு துறை தலைவர் அருள் ஆதித்யா அவரது மனைவி ரேவதி தலைமை நிர்வாக அதிகாரி மெய்யழகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இதில் சிவநரேந்திரன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். சிவநரேந்திரன் துாத்துக்குடி செல்ல பஸ் ஏறியபோது சுற்றிவளைத்து கைது செய்தனர்.
வேலையில்லாத விரக்தி பட்டதாரி தற்கொலை
ரியாங்குப்பம் : முதலியார்பேட்டையில் வேலையில்லாத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தனது பிறந்த நாளில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், செம்மண்டலத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் வெங்கடநாராயணன், 25. சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கொரோன ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் விரக்தியில் இருந்து வந்தார்.மரப்பாலம் நுாறு அடி சாலை, ஜெயமூர்த்தி ராஜா நகரில் உள்ள தனது சித்தி வீட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கிருந்தார். வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது பிறந்த நாளில், பாத்ரூமுக்குள் சென்று தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE