மதுரை: தமிழக அரசு பள்ளிகளில், ஆபத்தான வகுப்பறைகளை இடிக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், தகுதியற்ற வகுப்பறைகள் கட்டிய அதே கான்ட்ராக்டர்களுக்கே பெரும்பாலும் இடிக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து, மூன்று மாணவர்கள் பலியாகினர். இதையடுத்து, அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்டம் வாரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்படுத்த தகுதியற்ற வகுப்பறைகள், கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
20 ஆண்டுகள்
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த ஒன்றரையாண்டில் வகுப்பறைகள் பராமரிக்கப் படவில்லை. இடிக்க வேண்டிய கட்டடங்களின் பட்டியலை, நவம்பர் 1க்கு முன்பே பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறைக்கு கல்வித் துறை பரிந்துரைத்தும், நெல்லை சம்பவம் வரை, இடிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.
நெல்லை சம்பவத்திற்கு பின், கல்வித் துறை அவசர உத்தரவால், ஆங்காங்கே வகுப்பறைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இடிக்க வேண்டிய பட்டியலில், 10 முதல் 15 ஆண்டு களுக்கு முன் கட்டிய கட்டடங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளன. இதுதவிர, 20 ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் எந்த பணிகள் நடந்தாலும் அதிகாரிகளுக்கும் 'பங்கு' உண்டு. 10 - 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் பயன்படுத்த தகுதியில்லாத போது, அதன் தரம் குறித்து, கான்ட்ராக்டர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அவர்களிடமே இடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.இது, முறைகேடை ஊக்குவிக்கும். கட்டப்பட்டு குறைந்த ஆண்டுகளில் 'தகுதியற்ற வகுப்பறை' என கணக்கெடுக்கப்பட்டிருந்தால் அந்த கான்ட்ராக்டர்கள், அதை அனுமதித்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

47 கட்டடங்கள்
தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில், 19; கும்பகோணம் கல்வி மாவட்டத்தில், 14; பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 14 என மொத்தம் 47 பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டு, இடிக்கும் பணி துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE