சென்னை : சென்னை போலீசில், களையெடுப்புக்கான பட்டியல் தயாராகி வருவதால், போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
சென்னை போலீசில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சட்டம் - ஒழுங்கு பிரிவிலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவிலும் பணிபுரியும் போலீசார் பற்றிய பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும். இந்த பட்டியலில் இரண்டாம், முதல் நிலை மற்றும் தலைமைக் காவலர்கள், ஏட்டு மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் குறித்த விபரங்கள் இடம்பெற வேண்டும். பட்டியலை இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும் என, தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் போலீசாரை போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் போலீசாரை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் மாற்ற, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு, போலீசாரிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

போலீசார் கூறுகையில், 'இந்த களையெடுப்பால் நிர்வாக சீர்கேடு ஏற்படும். மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட போக்குவரத்து போலீசாரால், சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணிபுரிய முடியாது.'போக்குவரத்து பிரிவில், நான்கு மணி நேரம் பணிபுரிந்தால், நான்கு மணி நேரம் ஓய்வு கிடைக்கும். தினமும் இரவுப்பணி இருக்காது. ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரிவில் ஓய்வு கிடைக்காது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படும்' என்றனர்.
நிர்வாக பிரிவு போலீசார் கூறுகையில், 'பட்டியல் தயாரிப்பு பணி வேகமாக நடக்கிறது. பணியிட மாறுதலுக்கான அறிவிப்பு ஜன., 1ல் வெளிவர உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE