நாம் வாக்காளரா, பிச்சைக்காரரா?
என்.சுந்தரம், ஒட்டப்பிடாரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தம் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் எப்பாடுபட்டாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்றும் தீவிரம் காட்டுகின்றன.இதற்காக மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்ற போர்வையில், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை, அள்ளி வீசி வருகின்றன.இது போன்ற மாய்மால வாக்குறுதிகளை நம்பி ஓட்டு அளித்த தமிழக மக்கள், இன்று நொந்து நுாலாகியுள்ளனர். அது போன்று, அந்த ஐந்து மாநில மக்களும் ஏமாற வேண்டுமா?நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவதை, தேர்தல் கமிஷன் ஆதரிக்கிறதா... அந்த பொய்யான வாக்குறுதிகளுக்கும், தேர்தல் கமிஷனும் உடந்தையா... வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்கிறதா?
'பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால், வேலை இல்லாத இளைஞருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவோம்...' என்பது போன்ற, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.நன்றாக கவனியுங்கள்... 'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம்' என்று சொல்லவில்லை. மாதம், 1,000 ரூபாய் 'இனாம்' தருவோம் என்று தான், கதை விடுகிறார்.அதாவது, பஞ்சாப் தேர்தலில் தப்பித் தவறி ஆம் ஆத்மி வெற்றி பெற்று விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அம்மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள், 1,000 ரூபாயில் தான் பிழைத்து கொள்ள வேண்டும்; வேலை ஏதும் கொடுக்கப்படாது.
கோவாவில், திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, 'நாங்கள் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாமாதம், 5,000 ரூபாய் வழங்குவோம்' என்று, 'ரீல்' சுற்றுகிறார்.இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், இந்த நாட்டு மக்களை, சுயமரியாதை உள்ள மனிதர்களாக கருதுவதே இல்லை; பிச்சைக்கார கும்பலாகத் தான் கருதுகின்றன.
அரசியல் கட்சிகளின் இந்த மனப்போக்கை, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறதா என்பதே நம் கேள்வி. நாம் வாக்காளரா இல்லை பிச்சைக்காரரா?
சென்னை மட்டும் தமிழகம் அல்ல!
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மூன்று இடங்களில், 335 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை தான், தமிழகத்தின் தலைநகர் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், சென்னை மட்டும் தான் தமிழகம் என, அரசு கருதுவதை தான் ஏற்க முடியவில்லை.சென்னையின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் அரசு நிர்வாகம், தமிழகத்தில் பிற இடங்களை கண்டுகொள்வதில்லை. சென்னையை போல, பிற நகரங்கள் வளர்ச்சி காணவில்லை என்பதே அதற்கு சான்று.
மதுரை கோரிப்பாளையம்- அரசு ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு மற்றும் காளவாசல் -- பழங்காநத்தம் நெடுஞ்சாலையில், மதுரை -- போடி ரயில்வே சந்திப்பிலும் மேம்பாலம் கட்ட வேண்டும் என, 10 ஆண்டுகளாக மதுரை மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தமிழக ஆட்சியாளர்களிடம் எவ்வளவோ மன்றாடி கேட்டும், பலமுறை கோரிக்கை விடுத்தும், அத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை.ஆனால், சென்னையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இதுவரை பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இரு திராவிட கட்சிகளும், சென்னைக்கு மட்டுமே நிதியை வாரி வழங்குகின்றன. இது பிற நகர மக்களிடம்
அதிருப்தியை ஏற்படுத்துகிறது.மதுரை, கோவை, திருச்சி உட்பட, தமிழகத்தில் பிற நகரங்களின் வளர்ச்சியில் அரசு அக்கறை காட்டினால், வேலை வாய்ப்பு பரவலாகும்; சென்னையில் நெரிசலும் குறையும்.தமிழக அரசு சிந்திக்குமா?
மோசடி கணக்கிற்கு முற்றுப்புள்ளி!
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா சூழல் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை, மத்திய அரசு மீண்டும் வழங்க உள்ளது.கடந்த 1990க்கு பின் தான், மக்கள் பிரதிநிதிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி, அரசால் ஒதுக்கப்பட்டது.அதற்கு முன்பெல்லாம், துறை ரீதியாக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து தான் தொகுதிக்கு செலவு செய்யப்படும்.'கமிஷன்' அடிக்காமல், தான் செய்யும் மக்கள் பணியை விளம்பரப்படுத்தாமல், அந்த காலத்தில் எம்.எல்.ஏ., -- எம்.பி.,க்கள் இருந்தனர். தி.மு.க.,வில் அப்படி ஒரு எம்.எல்.ஏ., இருந்தார் என்பது
ஆச்சரியமான விஷயம் தான்.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் புலவர் கே.கோவிந்தன், செய்யாறு தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்.தன் தொகுதியில், சுகாதார பணி மேற்கொள்ள கோரி, அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டேவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.இதை அறிந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் ஹண்டேவை அழைத்து, 'நீங்களே நேரில் சென்று, கோவிந்தனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்' என்றார்.கோரிக்கை விடுத்தவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், கோவிந்தனின் முழு நேர மக்கள் தொண்டு, எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தது. கமிஷன் வாங்க வேண்டும் என்பதற்காகவே இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள், பயனில்லாத நிழற்குடை, நடைமேம்பாலம் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்குகின்றனர்.தொகுதி மேம்பாட்டு நிதியில், மக்கள் பிரதிநிதிகள் என்னென்ன, எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பது, தொகுதி மக்களுக்கு தெரிய வேண்டும்.
நாடே பொருளாதார ரீதியில் தடுமாறும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள், 2 லட்சம் ரூபாய்க்கு நிழற்குடை அமைத்து, 20 லட்சம் ரூபாய் கணக்கு காட்டும்
மோசடிக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்குமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE