சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாணவ - மாணவியரும், பொதுமக்களும் இல்லங்களில் ஒரு மரக்கன்றாவது நட்டு, வளர்க்க வேண்டும். தொழில் நிறுவனத்தினரும், அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும். அனைவரும், இந்த பழக்கத்தை கடைப்பிடித்து, சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக மாற வேண்டும். மரம் நடும் பணியை நம் மாநிலத்தில் பல அமைப்புகள் செய்து வருகின்றன. நீர்நிலைகளில் சாயம் கலக்கும் கொடூரர்களை கண்டும் காணாமல் விடுவதை தடுத்து நிறுத்தினால், உங்கள் பதவிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.
தமிழக பாடநுால் நிறுவன வாரியத்தின் முன்னாள் தலைவர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஆட்சியில், வெளி மாநிலத்திலிருந்தோ, தமிழகத்தில் உள்ள தனியார் காகித தொழிற்சாலைகளில் இருந்தோ காகிதம் கொள்முதல் செய்யக்கூடாது என்றும், அரசு காகித தொழிற்சாலை வாயிலாக தான் வாங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. மும்பை தமிழ் மாணவர்களுக்கும், 1987ம் ஆண்டு, இலவச பாடநுால், தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. 'அதெல்லாம் அப்போ! இப்போ, முதல்வருக்கு தெரியாமலேயே நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆர்டர் கொடுப்போம்' என, அமைச்சர்கள் சொன்னால் என்ன செய்வீர்கள்?
தமிழக காங்கிரஸ் துணை தலைவர் செந்தமிழ் அரசு அறிக்கை: கே.எஸ்.அழகிரியின் அரசியல் அனுபவம், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலையின் வயதாகாது. எப்படியாவது ஊடகங்களில் தன்னை பற்றி பேச வேண்டும் என்பதற்காக, தேவையில்லாமல் அழகிரியை விமர்சிப்பது, நாகரிகமான அரசியல் இல்லை என்பதை உணர்ந்து அண்ணாமலை பேச வேண்டும்.தவறு செய்வது யாராக இருந்தாலும், தட்டிக் கேட்பதோ, சுட்டிக் காட்டுவதோ தான் ஜனநாயகம் என்பது தானே, உங்கள் கட்சியினர் கடந்த ஏழு ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர். அண்ணாமலை அதைச் செய்யக் கூடாதோ!
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது, இலங்கையில், கொரோனா தடுப்பு என்ற பெயரில், கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறையினர் தெளிப்பான்கள் வாயிலாக பீய்ச்சியடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய மனித உரிமை மீறல் கண்டிக்கத்தக்கது. மனிதர்கள் மீது, கிருமி நாசினியைத் தெளிப்பது மிகக் கொடுமையான பக்கவிளைவுகளையும், நோய்களையும் ஏற்படுத்தும். மீனவர்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் மத்திய அரசு, இந்தக் கொடுமையைச் சுட்டிக் காட்டி ஒரு கண்டன கடிதமாவது, இலங்கை அரசுக்கு எழுத வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE