'பார்' ஏலத்துக்கு 10 லட்சம் கேட்கும் ஆளுங்கட்சியினர்!
குளிருக்கு இதமாக, நாயர் தந்த இஞ்சி டீயை சுவைத்தபடியே, ''யார் மேல தப்புங்கிறதை கண்டுபிடிச்சுட்டாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்புல, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யுது... இந்த நெல், வாணிப கழகத்துக்கு சொந்தமான மற்றும் தனியார் ஆலைகள்ல அரிசியா மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு சப்ளை ஆகுது பா...
''வாணிப கழகத்தின் மாவட்ட தர கட்டுப்பாட்டு மேலாளர்கள், ஆலைகள்ல அரிசியின் தரத்தை பரிசோதனை செய்யணும்... ஆனா, சில ஆலைகளின் 'கவனிப்பு' காரணமா, அவங்க அனுப்புற தரமற்ற அரிசியை, ரேஷன் கடைக்கு சப்ளை செய்துடுறாங்க பா...
''தரமற்ற அரிசிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தான் காரணம்னு, அவங்க மேல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாங்க... ஆனா, தரக் கட்டுப்பாட்டு மேலாளர்கள் மேல தான் தப்புங்கிறதை உயர் அதிகாரிகள் இப்ப கண்டுபிடிச்சுட்டாங்க...
''அதனால, 'இனி, ரேஷன் கடைகள்ல தரமில்லாத அரிசி புகார் வந்தா, தர கட்டுப்பாட்டு மேலாளர்கள் மேல கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'னு எச்சரிக்கை குடுத்திருக்காங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.
''பாரம்பரிய கட்டடத்தை பாதுகாக்கணும்னு சொல்லுதாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மதுரை கலெக்டர் ஆபீஸ், 1916ல பிரிட்டிஷ் ஆட்சியில கட்டிய கட்டடத்துல செயல்பட்டுச்சு... போன ஆட்சியில, இதே வளாகத்துல, 33 கோடி ரூபாய் செலவுல புதிய கட்டடம் கட்டி, அங்க கலெக்டர் அலுவலகத்தை மாத்துனாவ வே..
.
''இவ்வளவு செலவழிச்சு கட்டியும், மழைக்கு பல இடங்கள்ல கட்டடத்துல தண்ணீர் தேங்குது... உயர் அதிகாரிகள் அறைக்குள்ள சாரல் அடிக்கு வே... இதை, பொதுப்பணித் துறையினர் சீரமைச்சிட்டு இருக்காவ வே...
''இதுக்கு இடையில, பழைய கட்டடத்தை பாரம்பரிய சின்னமா பராமரிக்க, சீரமைப்பு பணிகள் நடந்துட்டு இருக்கு... 'இதையாவது முறையா செஞ்சு, நகர்ல பல இடங்கள்ல செயல்படும் அலுவலகங்களை இங்க மாத்தணும்'னு மதுரை மக்கள் சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''பார் ஏலத்துக்கு பேரம் பேசிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி விஷயத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' என விசாரித்தார், அண்ணாச்சி.
''சேலம் மாவட்டத்துல, 218 டாஸ்மாக் கடைகள் இருக்கு... இந்த கடைகளுக்கான பார் ஏலம் வரும் 31ம் தேதி, மாவட்ட மேலாளர் அலுவலகத்துல நடக்கப் போறது ஓய்... ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை நடத்தப் போறதா சொல்லி இருக்கா...
''அந்தந்த கடைகள் இருக்கற பகுதியின் ஆளுங்கட்சி நிர்வாகிகள், 'எங்களை கவனிச்சா தான், ஏலம் எடுக்க முடியும்'னு மிரட்டறா... சேலம் சிட்டிக்குள்ள இருக்கற பார்களுக்கு விற்பனைக்கு ஏத்தா மாதிரி, 10 லட்சம் துவங்கி 30 லட்சம் ரூபாய் வரை ஆளுங்கட்சியினர் பேரம் பேசறா ஓய்...
''குறிப்பா, சேலம் சிட்டியில புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் பக்கத்துல இருக்கற கடைகள், ஸ்வர்ணபுரி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி கடைகளை ஏலம் எடுக்க, ஆளுங்கட்சியினர் அதிக தொகை கேக்கறா... இதனால, பார் ஏலம் எடுக்கவே பலரும் தயங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE