உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
என்.சுந்தரம், ஒட்டப்பிடாரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தம் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் எப்பாடுபட்டாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்றும் தீவிரம் காட்டுகின்றன.
இதற்காக மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்ற போர்வையில், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை, அள்ளி வீசி வருகின்றன.

இது போன்ற மாய்மால வாக்குறுதிகளை நம்பி ஓட்டு அளித்த தமிழக மக்கள், இன்று நொந்து நுாலாகியுள்ளனர். அது போன்று, அந்த ஐந்து மாநில மக்களும் ஏமாற வேண்டுமா? நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவதை, தேர்தல் கமிஷன் ஆதரிக்கிறதா... அந்த பொய்யான வாக்குறுதிகளுக்கும், தேர்தல் கமிஷனும் உடந்தையா...

வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்கிறதா?' பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால், வேலை இல்லாத இளைஞருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவோம்...' என்பது போன்ற, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
நன்றாக கவனியுங்கள்... 'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம்' என்று சொல்லவில்லை. மாதம், 1,000 ரூபாய் 'இனாம்' தருவோம் என்று தான், கதை விடுகிறார். அதாவது, பஞ்சாப் தேர்தலில் தப்பித் தவறி ஆம் ஆத்மி வெற்றி பெற்று விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அம்மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள், 1,000 ரூபாயில் தான் பிழைத்து கொள்ள வேண்டும்; வேலை ஏதும் கொடுக்கப்படாது.
கோவாவில், திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, 'நாங்கள் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாமாதம், 5,000 ரூபாய் வழங்குவோம்' என்று, 'ரீல்' சுற்றுகிறார்.இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், இந்த நாட்டு மக்களை, சுயமரியாதை உள்ள மனிதர்களாக கருதுவதே இல்லை;
பிச்சைக்கார கும்பலாகத் தான் கருதுகின்றன.அரசியல் கட்சிகளின் இந்த மனப்போக்கை, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறதா என்பதே நம் கேள்வி. நாம் வாக்காளரா இல்லை பிச்சைக்காரரா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE