புதுடில்லி :பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் மொத்தம் 12 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால் அரசு தரப்பு திருப்தி அடைந்துள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ல் துவங்கியது. இதில், கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் ஒழுங்கீனமாக செயல்பட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், இரு சபைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ராஜ்யசபாவின் பெரும்பாலான அலுவல்கள் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்தம், அணை பாதுகாப்பு மசோதா உட்பட 10 மசோதாக்களை ஆளும் கட்சி தரப்பு நிறைவேற்றியது. இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டதை விட, ஒரு நாள் முன் கூட்டியே நேற்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நடப்பு கூட்டத் தொடரில் 12 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 10 மசோதாக்கள் 48 மணி நேர விவாதத்துக்கு பின் நிறைவேறி உள்ளன.லோக்சபாவில் மொத்தம் 83.2 மணி நேரம் அலுவல் நடந்துள்ளது.
அதில், 26.5 மணி நேரம் மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.ராஜ்யசபா இயங்கிய 45.4 மணி நேரத்தில், 21.7 மணி நேரம் மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு சபைகளையும் சேர்த்து 48 மணி நேரம் மட்டுமே விவாதம் நடந்துள்ளது.
விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து லோக்சபாவில் 2 நிமிடம் மற்றும் ராஜ்யசபாவில் 8 நிமிடம் மட்டுமே விவாதிக்கப்பட்டன.உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம் தொடர்பான மசோதா மீது தான் அதிக நேரம் விவாதம் நடந்துள்ளது.இரு சபைகளையும் சேர்த்து ஒன்பது மணி 37 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது.
லோக்சபாவில் 27 பேரும், ராஜ்யசபாவில் 17 பேரும் விவாதத்தில் பங்கேற்றனர்.அதற்கடுத்து அணை பாதுகாப்பு மசோதா குறித்து ராஜ்யசபாவில் 4 மணி 24 நிமிடங்கள் விவாதம் நடந்தது. லோக்சபாவில் 2019ல் 4 மணி 37 நிமிடங்கள் விவாதம் நடந்தது. குழந்தை திருமண சட்ட திருத்த மசோதா உட்பட நான்கு மசோதாக்கள், நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுஉள்ளன.
தேசிய கீதம் பாடி போராட்டம்!
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் போது நடந்த அமளியில், சபையின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 12 பேர், குளிர்கால கூட்டத் தொடரின் போது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக் கோரி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பார்லி., வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.,க்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திரண்டனர். அங்கு, அரசியலமைப்பின் முன்னுரையை படித்தும், தேசிய கீதத்தை பாடியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில், ராஜ்யசபாவின் காங்., எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது:மசோதாக்கள் விவாதம் இன்றி எளிதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவே சஸ்பெண்ட் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.'சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தால், சபை நடவடிக்கை பாதிப்பின்றி நடைபெறும்' என, கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்காமல் இப்போது
எங்களை குற்றம் சொல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE