துளிர்த்தது ஒரு நாளிதழின் பதிப்பாய் மலர்ந்தது கொங்கு மண்ணின் மதிப்பாய்!

Updated : டிச 24, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (59)
Advertisement
காட்சி ஊடகங்களே காலுான்றாத காலம் அது. நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களே மக்களின் உச்சபட்ச நம்பிக்கையாக இருந்ததும் அந்த 90களில் தான். அப்போது கோவை நகரின் அருமை, பெருமை அடுத்திருக்கும் மாவட்டத்துக்கே தெரியாது. அற்புதமான க்ளைமேட், மரியாதைக்குரிய மக்கள், சுவையான குடிநீர் என்று கோவையைப் பற்றிய அரிச்சுவடிப் பதிவுகளும் அக்கரை தாண்டியதில்லை.அந்த
தினமலர், Dinamalar

காட்சி ஊடகங்களே காலுான்றாத காலம் அது. நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களே மக்களின் உச்சபட்ச நம்பிக்கையாக இருந்ததும் அந்த 90களில் தான். அப்போது கோவை நகரின் அருமை, பெருமை அடுத்திருக்கும் மாவட்டத்துக்கே தெரியாது. அற்புதமான க்ளைமேட், மரியாதைக்குரிய மக்கள், சுவையான குடிநீர் என்று கோவையைப் பற்றிய அரிச்சுவடிப் பதிவுகளும் அக்கரை தாண்டியதில்லை.

அந்த சூழ்நிலையில்தான், 1992ம் ஆண்டில், சின்னஞ்சிறு மொட்டாக மலர்ந்தது கோவை 'தினமலர்' பதிப்பு.கறுப்பும் வெள்ளையுமாய், விருப்பும் வெறுப்புமாய் மட்டுமே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், கொங்கு மண்டல மக்களின் எண்ண ஓட்டங்களை, ஏக்கப்பெருமூச்சுகளை வண்ணப் படங்களால், வலிமையான எழுத்துக்களால் கொங்கு மக்களை வசீகரித்தது கோவை 'தினமலர்!'
அரசு அதை செய்யாதா, இதைச் செய்யாதா; அதிகாரிகள் கவனிப்பரா, கண்டுகொள்வரா என்று கோவையின் தேவைகளுக்காக 'பிறர்' அரசிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றி, இதை ஏன் செய்யவில்லை?அதை விட அதிகாரிக்கு என்ன வேலை என்று எழுத்துச்சாட்டைகளால் இழுத்தடித்து, அரசு நிர்வாகத்தின் பார்வையின் திருப்பியது 'தினமலர்!' குறுக்கும் நெடுக்குமாய் உள்ள தெருக்களுக்கும், பேரே தெரியாத ஊர்களுக்கும் தேடித்தேடிச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்னைகளை அறிந்து, அவர்களின் குரலை அரசின் செவிட்டுச் செவிகளில் ஓங்கி ஒலித்தது. விளைவு, எத்தனையோ பிரச்னைகளுக்கு கிடைத்தது தீர்வு.
ஒருங்கிணைந்த கோவை, நீலகிரி என இரண்டு மாவட்டங்களிலும் இருந்த மக்களின் கவனமும் 'தினமலர்' மீது திரும்பியது இப்படித்தான். இந்த 29 ஆண்டுகளில் கோவை 'தினமலர்' சாதித்துள்ள விஷயங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; புத்தகம் போட வேண்டும்.
உதாரணத்திற்கு சில...


latest tamil news

விவசாயிகள் வேதம்!பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தில் பல லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால் அதற்கான தண்ணீர் எங்கிருந்து வருகிறது, அதன் நதிமூலமென்ன, தமிழகம்-கேரளா இடையே இருக்கின்ற ஒப்பந்தமென்ன, தமிழகத்தை கேரளா எப்படி ஏமாற்றியது?நம் விவசாயிகளை திராவிடக் கட்சிகள் ஓட்டு அரசியலுக்காக எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி ஆணித்தரமாக 'தினமலர்' வெளியிட்ட தொடர் கட்டுரை தான், இன்றைக்கும் பி.ஏ.பி., விவசாயிகளின் வேதப் புத்தகமாக இருக்கிறது.

அதை கேட்டிருந்தால்...'தினமலர்' சொன்னதைக் கேட்டு நடவடிக்கை எடுத்த அரசுகள், மக்களின் மனங்களை வென்றிருக்கின்றன. அதை மதிக்காததால், பல உயிர்கள் பலியாகும் பரிதாபம் நிகழ்ந்தது.கடந்த 1998ல் கோவை குண்டு வெடிப்புக்கு முன் நடந்த மதக்கலவரத்தின்போதே, இப்படியொரு விபரீதம் நிகழ திட்டமிருக்கிறது என்று எச்சரித்தது தினமலர்.அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தது அப்போதிருந்த அரசு. அதன் விளைவு, கோவையில் 14 இடங்களில் குண்டுகள் வெடித்தன; 58 உயிர்கள் அநியாயமாக பலியாகின. கோவையின் பொருளாதாரம் சிதைந்தது. நகரின் வளர்ச்சி தடைபட்டது. அன்றிலிருந்து இன்று வரை கோவையில் ஒருவித 'இறுக்கம்' இன்னமும் தொடர்கிறது.மேற்கு மாவட்டங்களில் ரயில் தேவைகள் புறக்கணிப்பை எதிர்த்து, சேலம் கோட்டத்துக்கு விதை போட்டது கோவை மண். அதில் முக்கியப் பங்காற்றி கோட்டம் உருவாகும் வரை எழுத்தாற்றல் கொண்டு போராடியது கோவை தினமலர்.

கோவையின் கூவமாகச் சித்தரித்து, நொய்யலுக்கு சமாதி கட்டுவதற்கு பல முனைகளிலும் பலமான தாக்குதல் தொடுக்கப்பட்ட நிலையில், பெரும் நம்பிக்கையாகத் துளிர்த்தது 'சிறுதுளி' அமைப்பு. அதற்குப் பக்கபலமாக இருந்து நொய்யல் குறித்து தொடர் கட்டுரை வெளியிட்டு, கோவை மக்களை ஓரணியில் திரட்டி பேரணியும் நடத்தி, நொய்யலை அதன் கிளை நதியான கவுசிகா நதியை இன்று வரை காத்துக் கொண்டிருப்பதில் 'தினமலர்' பங்களிப்பு எவ்வளவு என்பது ஊரறிந்த... இல்லையில்லை உலகறிந்த சேதி.


பிணைப்பு!தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமென்பதை நிரூபிக்கும் வகையில், 'தினமலர்' பொதுப் பக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்களை விட இரு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியது கோவை பதிப்பின் கூடுதல் இணைப்பு. கோவை நாளிதழ் பதிப்புகளில் இன்று வரை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, நீலகிரி என பகுதி வாரியாக இணைப்புகளை (Suppliment) வெளியிடுவது 'தினமலர்' மட்டுமே.இந்த இணைப்பு தான், அந்தந்த பகுதி மக்களின் இதயத்தை ஈர்க்கின்ற பிணைப்பாக மாறியுள்ளது. இவற்றில் வெளியிடப்படும் செய்திகள் ஏற்படுத்தும் தாக்கங்களையும், விளைவுகளையும் ஆய்வு செய்தால், ஓர் அரசு செய்ய வேண்டிய பணியை கோவை 'தினமலர்' அமைதியாகச் செய்து வருவது அனைவருக்கும் ஆணித்தரமாய் விளங்கும்.

புறவழிச்சாலைகள், பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், ரிசர்வ் சைட் மீட்பு என கோவை நகரின் வளர்ச்சியில் இந்த இணைப்பில் வெளியிட்ட செய்திகளின் பங்களிப்பு மகத்தானது; மறுக்க முடியாதது.அதிலும் கோவையில் 'தினமலர்' செய்தியால் மீட்கப்பட்ட பூங்கா இடங்களின் மதிப்பே 500 கோடி ரூபாயைத் தாண்டும். அவற்றில் வைத்து வளர்க்கப்படும் மரங்களுக்கும், அவற்றால் இந்த மாநகரின் மாசிலிருந்து தப்பி, மக்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியத்துக்கும் யாராலும் மதிப்பே நிர்ணயிக்க முடியாது.

அதேபோல, திருப்பூரில் பசுமையை வளர்ப்பதிலும், பனியன் தொழிலைப் பாதுகாப்பதிலும், பொள்ளாச்சி, உடுமலையில் விவசாயத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதிலும், நீலகிரியின் சூழல் தன்மையை, மழை பெய்யக் காரணமான மலையை, நதிகளின் தாய் மடியைக் காப்பதில் 'தினமலர்' வெளியிட்ட கட்டுரைகளின் வீரியமும் அவை ஏற்படுத்திய விளைவுகளும் எளிதில் விவரிக்க முடியாதவை. செய்திகளால் மட்டுமல்ல; விளம்பரங்களிலும் வித்தியாசம் காட்டி, மக்களுக்கு அதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கோவை 'தினமலர்!'


மலை காப்பதில் தலை!நீலகிரியின் காப்புக்காடுகளில் காசிருந்தால் எங்கும் படப்பிடிப்பை நடத்தி, சூழல் தன்மையைச் சூறையாடலாம் என்ற நிலையை மாற்றியது 'தினமலர்' தான். யானைகளின் வழித்தடங்களையும், தென்னகத்தின் நீர்த்தொட்டியான கூடலுார் வனத்தையும், முதுமலை, ஆனைமலையில் உள்ள புலிகள் உள்ளிட்ட கானுயிர்களையும் காப்பதிலும் 'தினமலர்' தான் இன்றைக்கும் முதல் சேவகன்.தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் உண்மையை உரக்கச் சொல்லி, மனித உரிமை ஆணையத்திலும் சாட்சியாய் நின்றது தினமலர்.செக்சன் 17 நிலங்கள் மீட்பு, யானைகள் வலசைப் பாதைகளின் ஆக்கிரமிப்பு, யானை - மனித மோதலுக்கான காரணிகள் போன்றவற்றில் எவ்வித பாரபட்சமுமின்றி 'தினமலர்' வெளியிட்ட செய்திகளே, அதற்கான தீர்வுகளை நோக்கி அரசை நகர்த்திக் கொண்டுள்ளன.

இன்றைக்கு காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும், கோவை 'தினமலர்' சொன்னால் அதில் உண்மையும், நன்மையும் இருக்குமென்று நம்பும் மக்கள் பல லட்சம் பேர் இருக்கின்றனர்.அதுதான் கோவை 'தினமலர்' பதிப்பு, கொங்கு மண் பெற்றுள்ள மதிப்பு.இன்னும் சொல்வதற்கு எத்தனையோ இருக்கின்றன. அதையெல்லாம் நாம் சொல்வதை விட, கோவை 'தினமலர்' நாளிதழின் தீவிர வாசகர்களாக இருக்கின்ற நீங்கள் சொல்வதே பொருத்தமாய் இருக்கும்.ஒன்று மட்டும் ஊருக்கே தெரியும். கோவை 'தினமலர்' ஒரு நாளிதழ் இல்லை; ஊரைக் காக்கும் ஓர் இயக்கம்!வாழ்த்தும் வாசகர்கள்...*விளம்பரம் வெளியிடுவதிலும் திருப்தி!

கடந்த 25 ஆண்டுகளாக 'தினமலர்' படித்து வருகிறேன். காலையில் எழுந்த உடன் 'தினமலர்' படித்தால் தான், அன்றைய பொழுது ஒரு திருப்தியை கொடுக்கும். மக்களுக்குத் தேவையான செய்திகளை சரியான முறையில் தெளிவாக வெளியிடுவது 'தினமலர்' மட்டுமே. விளையாட்டுச் செய்திகள் வெகு சிறப்பு. விளம்பரம் நம் தேவை ேகேற்ப, விரும்பிய விலையில் செய்யலாம் என்பது கூடுதல் திருப்தி!எம்.பூபதி, 49,பனியன் நிறுவன உரிமையாளர், திருப்பூர்.

*நடுநிலைமை தொடர வேண்டும்!

தொடர்ந்து, 23 ஆண்டுகளாக 'தினமலர்' நாளிதழ் படித்து வருகிறேன். மற்ற பத்திரிகைகளை காட்டிலும், 'தினமலர்' எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. சரியான செய்திகளை சரியான நேரத்தில் 'தினமலர்' வழங்கி வருகிறது. நடுநிலையுடன், தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே என் போன்ற வாசகர்களின் விருப்பம்!
திண்டு பாலு,ஆர்கெஸ்ட்ரா உரிமையாளர், பல்லடம்.

*மனசாட்சிப்படி செயல்படும் நாளிதழ்!

கோவை 'தினமலர்' துவங்கியதிலிருந்து நான் வாசகன். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என எந்தப் பக்கமும் சாயாமல், மனசாட்சிப்படி நடுநிலையோடு செயல்படும் ஒரே நாளிதழ். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கவலைப்படாமல், 'வாய்மையே வெல்லும்' என்ற சொல்லுக்கேற்ப செயல்படுகிறது.சட்டசபை, லோக்சபாவிலும் 'தினமலர்' செய்திகளை சுட்டிக்காட்டியே பலரும் பேசுவதே இதற்கு சாட்சி! பி. தியாகராஜன், 79,நுகர்வோர் பொருட்கள் ஏஜென்சி, பொள்ளாச்சி.

* சாயாமல் இருப்பதே சாதனை!

நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறதோ அதற்கு மட்டுமே ஆதரவு கொடுப்பேன். என்னைப் போலத்தான் 'தினமலர்' நாளிதழும். அது துவக்கப்பட்ட காலத்திலிருந்து நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அன்று முதல் இன்று வரை எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல், நடுநிலைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட்டு வருவது தான் 'தினமலர்' நாளிதழின் தனித்த சாதனை!
கோபாலகிருஷ்ணன்,ராமநாதபுரம், கோவை.


தினமலர் 30 :கொண்டாடும் கொங்கு மண்டலம்!'தினமலர்' நாளிதழ் வெறும் ஊடகமில்லை; ஓர் இயக்கம் என்பது எங்களின் பெருமையல்ல; ஊர் சொல்லும் பேர்; கொங்கு மண்டல வி.ஐ.பி.,க்களும் வாசகர்களும் ஒருமித்து சந்தோஷத்துடன் வழங்கும் சான்று... 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை 'தினமலர்' கடந்து வந்த பாதை குறித்து, தங்கள் பார்வையை, உணர்வுகளைச் சொல்கின்றனர் இவர்கள்...


*நொய்யலை மீட்ட 'தினமலர்!'கோவையில் நொய்யல் நதி சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருந்த சமயத்தில், மக்கள் மத்தியில் நீர் நிலைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, நொய்யலை பற்றி, தொடர் கட்டுரையை வெளியிட்டது, 'தினமலர்' நாளிதழ். நொய்யல் ஆற்றின் சிறப்பை மக்களிடம் அறிமுகப்படுத்தியதே 'தினமலர்' தான்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பாகவும், தொழில் துறையினருக்கு தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிகாட்டுவதில் 'தினமலர்' நாளிதழின் பங்கு அளப்பரியது. எங்களின் 'சிறுதுளி' அமைப்புக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் கிடைத்திருக்கிறதென்றால், இதன் வளர்ச்சிக்கு, 'தினமலர்' ஊன்றுகோலாக இருந்து செயல்பட்டுஇருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
வனிதா மோகன்,நிர்வாக அறங்காவலர், சிறுதுளி.


*தீர்வு காண்பதே 'தினமலர்' தனித்துவம்!'தினமலர்' ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தியின் எண்ணங்களை அப்படியே செயல்படுத்தி வருகிறது கோவை 'தினமலர்!' கடந்த 30 ஆண்டுகளில் காலமாற்றத்துக்கேற்ப வடிவமைத்துக் கொண்டாலும், பத்திரிகை தர்மத்திலிருந்து 'தினமலர்' விலகியதேயில்லை.
அனைத்து மக்களின் பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து ஆணித்தரமாக எழுதி, அதற்கு தீர்வு காண்பதில் 'தினமலர்' நாளிதழ் என்றுமே முன்னணியில் நிற்கிறது. மக்கள் அதை விரும்புவதும் அதனால் தான். விருப்பு, வெறுப்புகளுக்கு இடமின்றி, நடுநிலையோடு செயல்படுவதுடன், செய்திகளை விரைவாக வழங்குவதும் அதன் தனிச்சிறப்பு.
கிருஷ்ணராஜ் வானவராயர்,பாரதிய வித்யா பவன், கோவை மைய தலைவர்.


*ஹிந்து தர்மத்தை காக்கிறது!பல நாளிதழ்கள், பெரும்பான்மையாக உள்ள ஹிந்து சமயத்தை புறக்கணிப்பதோடு, இழிவுபடுத்தியும் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் 'தினமலர்' ஹிந்து தர்மத்தைக் காப்பதில் சேவகனாக நிற்கிறது. அதற்கு இழுக்கு வரும்போதெல்லாம், பல தரப்பினரின் கருத்துகளை வெளிப்படுத்தி, உண்மையை உலகுக்கு உரக்கச்சொல்லி நியாயத்தையும், ஹிந்து தர்மத்தையும் நிலைநிறுத்துகிறது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்


*முதலில் படிப்பது 'தினமலர்' தான்!நடுநிலை பத்திரிகை என்றால், அது 'தினமலர்' தான். ஏற்றுமதியாளராகிய நாங்கள், எப்போதும் முதலில் படிப்பது 'தினமலர்' நாளிதழை மட்டும் தான். திருப்பூர் ஏற்றுமதியாளர் மத்தியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்றுமதி சார்ந்த எல்லா செய்திகளையும், விரிவாகவும், உடனடியாகவும் வெளியிடுகின்றனர். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியில், 'தினமலர்' பங்களிப்பு மிக முக்கியமானது! ஏ.சக்திவேல்,ஏ.இ.பி.சி., மற்றும் 'பியோ' தலைவர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-டிச-202119:28:32 IST Report Abuse
Bhaskaran Kadantha aimbathu aandukaluku mel Dinamalar vaasagan inru velinaatukku vanthirunthaalum muthal velai kaniniyil Dinamalar padipathe
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
24-டிச-202117:28:39 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் வாழ்த்துக்கள்... தினமலரே...? ஆனால், “இயேசுவிடம் பேசுவது எப்படி?..... ஒரு குழந்தை தந்தையிடம் பேசுவதைப் போல, நீங்கள் இயேசுவிடம் பேசலாம். ஜெபிக்க தயாரா?” அப்படீன்னு விளம்பரம் வந்திருக்கு... தினமலர்..ல...? ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, மனுஷன கடிக்க வந்துட்டாய்யா.... வந்துட்டா.... குரூப்ஸ்
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
23-டிச-202122:59:08 IST Report Abuse
Krishnan தினமலருக்கு நன்றிகள் பல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X