சென்னை : சென்னை பல்கலை படிப்பில் சேராமலேயே 'ஆன்லைன்' தேர்வு எழுதியவர்களின் முடிவுகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சிண்டிகேட் கூட்டத்தில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை பல்கலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதில் தொலைநிலை கல்வி சார்பில், தேர்வு எழுதுவோருக்கு சலுகை வழங்கப்பட்டது.
அதாவது, 1980 -- 81ல் சென்னை பல்கலையில் படிப்பில் சேர்ந்து விட்டு, ஏதாவது பாடத்தில் அரியர் வைத்திருந்தால், அவர்களும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏராளமானவர்கள் ஆன்லைன் தேர்வில், கூடுதல் கட்டணம் செலுத்தி பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, அதன் முடிவுகளை தயார்படுத்தும் பணி நடந்தது. இதில், 117 பேர் சென்னை பல்கலையில் படிப்பில் சேராமலேயே, போலியாக தேர்வுக்கு மட்டும் விண்ணப்பித்து எழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களின் விடைத்தாள்கள் தனியாக வைக்கப்பட்டு, அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வர்கள் பல்கலையின் சேர்ந்து படித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும்; அதில் உண்மை இருந்தால் தேர்வு முடிவு அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில், பல்கலையின் தொலைநிலை கல்வி ஊழியர்கள், மாணவர் சேர்க்கை மையத்தினர் மற்றும் தனியார் படிப்பு மையத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என, கருதப்படுகிறது. ஒவ்வொரு தேர்வரிடமும், மூன்று லட்ச ரூபாய் வரை பெற்று, போலியாக அவர்களை பதிவு செய்து, அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வைத்துள்ளனர்.
தேர்வு முடிவு வெளியானால், அவர்களுக்கு பட்ட சான்றிதழ் கிடைக்கும் வகையில், இந்த முறைகேடுக்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, துணைவேந்தர் கவுரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இன்று பல்கலையில் நடக்கும் சிண்டிகேட் கூட்டத்திலும் விசாரணையும், ஆலோசனையும் நடத்தப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.