சபரிமலை : சபரிமலையில் டிசம்பர் 26ல் நடக்க உள்ள மண்டல பூஜைக்காக ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி பவனி நேற்று காலை புறப்பட்டது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை முதல் தேதியில் துவங்கிய மண்டல காலம் டிசம்பர் 26ல் நிறைவு பெறுகிறது. இந்த நாளில் அய்யப்பனுக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய 423 பவுன் எடையுள்ள தங்க அங்கி பவனியாக எடுத்து வரப்படுகிறது.
நேற்று காலை 7:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோனிலில் இருந்து பக்தர்களின் சரண கோஷத்துடன் பவனி புறப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்ற பவனி நேற்றிரவு ஓமலுார் வந்தடைந்தது. இன்று காலை இங்கிருந்து புறப்பட்டு, இரவு கோந்நி முருகமங்கலம் கோவிலில் தங்கும். நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, இரவு பெருநாடு சாஸ்தா கோவிலில் தங்கும். டிச., 25ல் அங்கிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். மாலை 3:00 மணிக்கு தலை சுமடு மூலம் அங்கி கொண்டுவரப்படும்.

மாலை 6.00 மணிக்கு சன்னிதானம் வந்து சேரும் அங்கியை தந்திரியும், மேல் சாந்தியும் பெற்று அய்யப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவர். டிசம்பர் 26 ல் நடக்கும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜைக்கு இன்னும் இரண்டு நாளே உள்ள நிலையில் பம்பை, சன்னிதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
படி பூஜை நிறுத்தம்கொரோனா காரணமாக மண்டல கால சீசன் துவக்கத்தில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டு சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காலை மற்றும் மாலையில் தரிசனத்துக்கு நீண்ட வரிசை காணப்படுகிறது. 18 படிகள் ஏறி மேம்பாலத்தில் நீண்ட நேரம் காத்து நின்ற பின்னரே பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கிறது.
உதயாஸ்தமன பூஜை நடக்கும்போது ஸ்ரீகோவில் முன்புறமுள்ள வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிரமப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் உதயாஸ்தமன பூஜை நிறுத்தப்பட்டது. இனி மாத பூஜையின் போது மட்டுமே இந்த பூஜை நடத்தப்படும். கடந்த காலங்களில் இல்லாத ஒரு நிகழ்வாக தற்போது மண்டல சீசனில் கார்த்திகை 1 முதல் எல்லா நாட்களும் படி பூஜை நடைபெற்று வந்தது.
இந்த பூஜை தீபாராதனைக்குப் பின் ஒன்றரை மணி நேரம் நடக்கும். இந்த நேரத்தில் பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஏற்படும் சிரமத்தை கருத்தில் வைத்து நாளை மறுநாளுடன் படி பூஜை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இனி மகரஜோதி தரிசனம் முடிந்து ஜனவரி 15-க்குப் பின்னே படி பூஜை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE