திருவனந்தபுரம் : தேசிய விருது வென்றுள்ள வினோத் மங்காரா, 'மங்கள்யான்' எனப்படும் செவ்வாய் கிரகத்துக்கான பயணம் தொடர்பான அறிவியல் படத்தை சமஸ்கிருத மொழியில் இயக்குகிறார்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. இதன் வெற்றி பயணம் தொடர்பாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் புத்தகம் எழுதியுள்ளார்.
அதை அடிப்படையாக வைத்து செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் 45 நிமிட அறிவியல் திரைப்படத்தை இயக்குகிறார், பிரபல இயக்குனர் வினோத் மங்காரா.சமஸ்கிருதத்தில் இவர் எடுத்துள்ள படம் ஏற்கனவே தேசிய விருதை வென்றுள்ளது.தற்போது சமஸ்கிருதத்தில் தன் இரண்டாவது படத்தை அவர் இயக்க உள்ளார்.

யானம் என்ற பெயரில் அறிவியல் அடிப்படையிலான இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்குகிறது. வரும் ஏப்ரலில் உலகெங்கும் இந்தப் படத்தை வெளியிட மங்காரா திட்டமிட்டு உள்ளார்.
இது குறித்து மங்காரா கூறியுள்ளதாவது: நம் நாட்டின் மிகவும் பழமையான மொழியான சமஸ்கிருதம், மொழிகளின் தாய் என அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் பல அறிவியல் தொடர்பான நுால்கள் உள்ளன.சமஸ்கிருத மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், நம் விண்வெளி ஆய்வின் வெற்றியை பறைசாற்றும் வகையிலும் இந்த படத்தை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE