திண்டிவனம்-திண்டிவனம் கோர்ட்டுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு படுமோசமாக இருப்பதால், புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனம் நேரு வீதியில் குறுகிய இடத்தில் பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் ஜக்காம்பேட்டையில், 19 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டது.திண்டிவனத்திலிருந்து கோர்ட்டுக்கு வாகனங்களில் வருபவர்கள் தென்பசார் (விழுப்புரம் ரோடு) வரை சென்று திரும்பி வரவேண்டி இருப்பதால், திண்டிவனம் அருகே சிங்கனுார் வரை உள்ள சர்வீஸ் ரோட்டை, புதிய கோர்ட் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.அதன் பேரில் கடந்த ஆட்சியில் ஜக்காம்பேட்டையிலிருந்து ஏரிக்கரை வழியாக கோர்ட் வரை செல்ல சாலை அமைக்கப்பட்டது. சாலையின் நடுவே மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 2019-20ம் ஆண்டில் 37.16 லட்சம் ரூபாய் செலவில் ஓடையின் மேல் பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.பாலம் அமைக்கப்பட்டு, சர்வீஸ் ரோட்டில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டு, மண் கொட்டப்பட்டது. அதன் பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை.தற்போது ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக உள்ளது. சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் சர்வீஸ் ரோடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பழுதான சாலையை சீரமைத்து புதிய தார் சாலை போடும்படி, வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை பழுது காரணமாக திண்டிவனத்திலிருந்து கோர்ட்டுக்கு பைக்குகள் மற்றும் கார்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஜக்காம்பேட்டை வழியாக கோர்ட்டுக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் புதியதாக தார் சாலை அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் மற்றும் மரக்காணம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement