மும்பை: தந்தைக்கு தெரியாமல் அவரது ஓய்வூதிய பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயை செலவு செய்த இளம்பெண் அதனை சரிகட்ட கடன் கேட்டு இணையத்தில் விசாரித்த போது, அவரை ஏமாற்றி இருவர் ரூ.14 லட்சத்தை பிடுங்கிக் கொண்டு விட்டுள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.18 லட்சம் ஓய்வூதிய பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்துள்ளார். அவரது 22 வயது மகள், அவருக்கு தெரியாமல் அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயை செலவு செய்துவிட்டார்.
அதனை ஈடுகட்ட கடன் வாங்க முடிவு செய்தவர் இணையத்தில் விசாரித்துள்ளார். ஜூலை மாதம் ஒருவர் நிதி நிறுவன முகவர் எனக் கூறி அவரிடம் அலைபேசியில் தொடர்புக் கொண்டுள்ளார். கடன் வழங்க பிராசசிங் கட்டணம் ரூ.2,600 அனுப்பக் கேட்டுள்ளனர். அவரும் அனுப்பி வைத்துள்ளார்.

அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பின்னரும் அவருக்கு கடன் வழங்கப்படவில்லை. நிதி நிறுவனத்தை அணுகிய போது, முகவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது, இனி நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறிய மற்றொருவர், மீண்டும் பிராசசிங் கட்டணம், அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என கேட்டுள்ளார். அவை அனைத்தும் திரும்பத் தரப்படும் எனவும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
இவ்வாறு ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒரு லட்சம் கடனுக்காக அவர் ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். அதன் பின்னரே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த அறிவாளி பெண் போலீசை அணுகியுள்ளார். மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.