உடுமலை : உடுமலையிலிருந்து, கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்திய, 3 லாரிகள் நேற்று, பறிமுதல் செய்யப்பட்டது. வருவாய் கோட்டத்தில், எத்தகைய, தடையில்லாமல், நடக்கும் கனிம வளக்கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை வருவாய் கோட்டம், மைவாடி, நரசிங்காபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல் குவாரிகள், கிரசர் தொழிற்சாலைகளிலிருந்து, ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் ஆகிய கனிம வளங்கள், கேரள மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.ஜல்லி, எம்.சாண்ட் ஆகிய கனிமம் ஏற்றப்படும் லாரிகளில், கனிம வளத்துறையால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது, கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.
குவாரி துவங்கும் போதே, அரசிடமிருந்து அதற்கான அனுமதி பெற்று, கனிம வளத்துறை அனுமதிச்சீட்டு, வேறு மாநிலத்திற்கு என்றால் கனிம வளத்துறையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்திய ரசீது, அரசு அனுமதி பெற்ற குவாரியாக இருந்தால், உரிமம் பெற்ற சான்று நகல் மற்றும் ஜி.எஸ்.டி., வரி செலுத்திய ரசீது என பல்வேறு ஆவணங்கள் இருக்க வேண்டும். பெரும்பாலும், தமிழகத்திலிருந்து கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல, எந்த விதமான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.
ஆனால், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து, சட்ட விரோதமாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல், தினமும், 50க்கும் மேற்பட்ட லாரிகளில், கேரளா மாநிலம், மறையூர், மூணாறு சுற்றுப்பகுதிகளுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு, அங்குள்ள, ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.இரு மாநில எல்லையான, ஒன்பதாறு போலீஸ் சோதனை சாவடி மற்றும் ஒன்பதாறு, சின்னாறு ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களின் சோதனைச்சாவடிகளை தாண்டி கொண்டு செல்லப்படுகிறது.
அதிலும், அடர்ந்த வனப்பகுதியில், வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இரவு நேரங்களில், உடுமலை - மூணாறு வழித்தடத்தில், லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திற்கு, கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும், என பொதுமக்கள் தரப்பிலும், வேறு மாநிலத்திற்கு கடத்தப்படுவதால் உள்ளூர் கட்டுமான தேவைக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதாக, லாரி உரிமையாளர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

3 லாரிகள் பறிமுதல்
இந்நிலையில், நேற்று காலை, கேரள மாநிலத்திற்கு, ஜல்லி மற்றும் எம்-சாண்ட் ஏற்றி சென்ற, மூன்று லாரிகளை, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், வருவாய்த்துறையினர் மடக்கிப்பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.
தாசில்தார் ராமலிங்கம் கூறுகையில், 'கேரள மாநிலத்திற்கு, ஜல்லி, எம்-சாண்ட் என எந்த கனிமங்களும் கொண்டு செல்ல அனுமதியில்லை. நேற்று பிடித்த மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றார்.
அதிகாரிகள் ஆசி?
கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்துவது குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்தும், போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. நேற்று வி.ஏ.ஓ., லாரிகளை பிடித்து, போலீசில் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்ய புகார் கொடுத்தும், மாலை வரை போலீசார் இழுத்தடித்து வந்தனர். பின்னர், தாசில்தார் புகார் கொடுக்க வேண்டும், என கூறியதால், தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டது.
சட்ட விரோத கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், கேரளா மாநிலத்திற்கு ஜல்லி, எம்-சாண்ட் விற்ற குவாரிகள் மீதும், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE