சென்னை : ''வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப் பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு, இந்தாண்டில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும், மருத்துவ சேவைகளின் தகவல் குறித்த, டிஜிட்டல் பலகையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: மருத்துவமனையில் எந்த மாதிரியான மருத்துவ சேவைகள், சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன; எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர்; மருத்துவமனைகளின் சாதனைகள் என்னென்ன என்பதை, டிஜிட்டல் பலகை வழியாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி, 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் அமைக்கப்படும்.

தமிழகத்தில், தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டும், பாதிப்பு குறைந்து வருகிறது. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் இருந்து வந்த, 3,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 104 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி கண்டறிப்பட்டது. இதில், 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 82 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், 71 பேர், கிண்டி கொரோனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அனைத்து மாதிரிகளும், மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை, 13 பேரின் முடிவுகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 8 பேருக்கு டெல்டா வகை தொற்று; 4 பேருக்கு சாதாரன பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. மற்ற மாதிரிகளின் முடிவுகள் படிப்படியாக வரும் என, எதிர்பார்க்கிறோம்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 669 பேர் சிகிச்சை பெறுகின்றனர்; இந்தாண்டில் இதுவரை, 4 பேர் உயிரிழந்துள்ளனர்.கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆய்வகத்தில் தொற்று கண்டறியப்பட்ட 13 பேரின் மாதிரிகளும், பெங்களூரில் உள்ள, மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE