கனடாவிலுள்ள மான்ட்ரியேலில் ஒரு மாற்று எரிபொருள் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அங்குள்ள சி.எஸ்.எல்., கப்பல் குழுமம், தனது வசமுள்ள கப்பல்களில் எட்டு கப்பல்களுக்கு மட்டும், 'பயோ பியூயல்' எனப்படும் உயிரி எரிபொருளை பயன்படுத்தியது. ஆறு மாதங்களுக்கு நடந்த இந்த சோதனையில், 14 ஆயிரம் டன்கள் பெட்ரோலிய எரிபொருளுக்கு பதிலாக, 'பி100 பயோ டீசல்' பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் சி.எஸ்.எல்., குழுமத்தின் எட்டு கப்பல்களும் வெளியேற்றிய கரியமில மாசுபாடு 23 சதவீதம் குறைந்தது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட இந்த நன்மையை, கனடா அரசின் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.இதற்கென கப்பல் இயந்திரங்களில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. மேலும், இந்த சோதனையில் பயன்பட்ட பயோ டீசல், வட அமெரிக்காவில், வீணாகும் எண்ணெய்களை மறு சுழற்சி செய்யும் ஆலையிலிருந்து தருவிக்கப்பட்டது.
பயன்படுத்தி வீணாக்கப்படும் உணவு எண்ணெய்களை தொழில்முனைவோர் வாங்கி, மறு சுழற்சி செய்து பயோடீசலை உருவாக்குகின்றனர். இதை சி.எஸ்.எல்., போன்ற குழுமங்கள் தங்கள் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்துகின்றன.இதேபோல உலக அரசுகள் தங்கள் நாட்டிலுள்ள கப்பல்களுக்கு பயோ டீசலை பயன்படுத்தும் முறையை அமல்படுத்தினால், உடனடியாக உலக கப்பல் துறை வெளிப்படுத்தும் கார்பன் மாசுபாட்டில் 23 சதவீதம் குறைந்துவிடும். உலக அரசுகளும், கப்பல் முதலாளிகளும் இதைச் செய்வார்களா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE