சென்னை: சென்னை கொரட்டூர், புளியந்தோப்பு, தரமணி ஆகிய இடங்களில், 1,750 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் 400 கிலோ வோல்ட் திறன் உடைய மூன்று நவீன துணை மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இதன்படி, 2,500 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக கையாள வசதி கிடைக்க உள்ளது.
11 கிலோ வோல்ட்
அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் 400 கிலோ வோல்ட் மின்சாரம், 230, 110 கிலோ வோல்ட் திறன் உடைய துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டு, உயரழுத்தம் குறைக்கப்படுகிறது.
இறுதியாக, 33 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து 11 கிலோ வோல்ட் திறன் உடைய 'பீடர்' எனப்படும் மின் வழித்தடங்கள் வாயிலாக நுகர்வோருக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம்; திருவள்ளூரில் மணலி, அலமாதி, தேர்வாய்கண்டிகை; செங்கல்பட்டில் ஒட்டியம்பாக்கம் ஆகிய இடங்களில், மின் வாரியத்திற்கு 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்கள் உள்ளன.
இந்த துணை மின் நிலையங்களுக்கு, திருவள்ளூரில் உள்ள வட சென்னை மின் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வருகிறது. அங்கிருந்து துணைமின் நிலையங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னையின் மின் தேவை, தினமும் சராசரியாக 2,800 மெகா வாட்டாக உள்ளது. இது, கோடையில் 3,000 மெகா வாட்டை தாண்டுகிறது. அதை பூர்த்தி செய்வதற்காக, திருவள்ளூரில் 'வட சென்னை - ௩' என்ற பெயரில், 800 மெகா வாட், எண்ணுாரில் 1,320 மெகா வாட் திறனில் சிறப்பு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் உற்பத்தியாகும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்படும் கூடுதல் மின்சாரத்தை கையாள்வதற்காக கொரட்டூர், தரமணி, புளியந்தோப்பு ஆகிய இடங்களில், 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அவற்றின் மொத்த திட்ட செலவு, 1,750 கோடி ரூபாய்.உத்தரவுஇந்த துணைமின் நிலையங்களின் கட்டுமான பணிகளை, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குனர் சண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது பணிகளை விரைந்து முடித்து, அவற்றை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
கட்டுமான பணிகள்கிண்டியில் நிறைவுமின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் அதிக திறன் உடைய துணைமின் நிலையங்களை அமைப்பதால், மின் இழப்பு வெகுவாக குறையும். சென்னைக்குள் இதுவரை 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்கள் இல்லை.
மின் தேவை அதிகரித்து வருவதால், கூடுதல் மின்சாரத்தை எடுத்து வர வேண்டியுள்ளது. இதற்காக கிண்டி, புளியந்தோப்பு, கொரட்டூர், தரமணியில் அதிக திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
கிண்டியில் பணிகள் முடிந்துவிட்டன. அங்கு, 500 மெகாவாட் மின்சாரத்தை கையாள முடியும்.புளியந்தோப்பில் கட்டுமான பணி 90 சதவீதமும், தரமணியில் 70 சதவீதம், கொரட்டூரில் 50 சதவீதமும் பணிகளும் முடிவடைந்துள்ளன. அவை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE