பெ.நா.பாளையம்: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டியில் கால்நடை துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் சில பண்ணைகளில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள வாத்துக்கள், கோழிகளை அழிக்கும் நடவடிக்கையை கேரளா எடுத்து வருகிறது.தமிழகத்தில் பறவை காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டி பஸ் ஸ்டாண்டில் கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களுக்கு போதுமான அளவு மருந்து தெளித்து, உரிய அறிவுரைகள் அதிகாரிகளால் வழங்கப்படுகிறது.

தமிழக கால்நடை துறையினர் கூறுகையில்,' கேரளாவில் நிலவும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கோவையிலுள்ள, 1200 க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில், ஒரு பன்முக கால்நடை மருத்துவமனை, 96 மருந்தகம், 15 கால்நடை மருத்துவமனைகள், 25 கிளை மையங்கள், ஒரு கிளினிகல் சென்டர் ஆகியவை உள்ளன. இவற்றில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் வாயிலாக அருகே உள்ள கோழிப்பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.குறிப்பிட்ட கோழிப்பண்ணைகளில் திடீரென அதிகப்படியான கோழிகள் இறந்தால், அது குறித்து உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கோழிப் பண்ணைகளை, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை பறவை காய்ச்சல் வந்தால், அதன் பாதிப்பு ஆறு மாத காலம் இருக்கும். இதனால் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் பண்ணையாளர்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE