மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.30 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இக்கோவில், 14.39 ஏக்கர் நில பரப்பில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முன்னாள் பூசாரி தங்கவேல் என்பவர், 3.30 ஏக்கர் கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தார். கோவை மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில், 1984 ம் ஆண்டு இந்த நிலம் தனக்கு உரியது என, தங்கவேல் வழக்குத் தாக்கல் செய்தார். இதில் தங்கவேலுக்கு அனுகூலமாக தீர்ப்பானது. இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை, கோவை சப் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. 1994 ம் ஆண்டு மேல்முறையீடு வழக்கில், கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2002 ம் ஆண்டு தங்கவேல் பூசாரி இறந்து விட்டார். அவரது மகன் குமரேசன் பூசாரியின் மகன்களான மோகன்ராஜ், காளிமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இரண்டாவது மேல்முறையீடு மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றிருந்தனர். வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்ற மேல் முறையீடு மனு, 2008 ம் ஆண்டு தீர்ப்பில், மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்து, கோவிலுக்கு சாதகமாக உத்தரவிடப்பட்டது. தமிழக அரசு, தனியாரிடம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை அகற்ற வேண்டும் என, அறிவித்தது.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வழக்கை துரிதப்படுத்தி, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் பூசாரி தங்கவேல் ஆக்கிரமிப்பு செய்திருந்த, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான, 3.30 ஏக்கர் கோவில் நிலத்தை, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிர்வாகம் கையகப்படுத்தியது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில், மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி, கண்காணிப்பாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE