கி.ரமேஷ், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா?தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்?அட, அ.தி.மு.க., பிரமுகர் பாலனையாவது நினைவிருக்கிறதா?அவர்கள் யாரும் அனாமதேயர்கள் அல்லர்; மிகவும் பிரபலமானோர். கட்சி பின்புலம் உள்ளோர்.அந்த மூவரில் இருவர் கொலை செய்யப்பட்டனர்; ஒருவர், 'பெர்முடாஸ்' முக்கோணத்தில் மாயமாய் மறையும் விமானங்கள் மாதிரி, மர்மமான முறையில் காணாமல் போனவர்.சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, 2,753 சதுர அடி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
அதில் நீதிபதி விசாரணை நடத்துவதற்கான சேம்பர் அறை, 702 சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகிறதாம். இது மட்டுமின்றி நீதிபதி ஓய்வறை, அலுவலகம், விசாரணைக்கு வருவோர் காத்திருக்கும் அறை உள்ளிட்டவையும் அமைக்கப்படுகிறதாம்.
அனேகமாக, ஆங்கில புத்தாண்டு தினத்தை ஆறுமுகசாமி கமிஷன் இந்த புதிய விசாரணை அறையில், 'கேக்' வெட்டி கொண்டாடும்.எழுதி வைத்து கொள்ளுங்கள்... இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும், ஆறுமுகசாமி கமிஷனால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாது; ஒரு குற்றவாளியையும் கண்டறிய முடியாது!
சிவாஜிகணேசன் நடித்து, தாதாமிராசி இயக்கத்தில் வெளியான, புதிய பறவை படம் நினைவிருக்கிறதா?அதில் தன் மனைவி சவுகார் ஜானகியை கொலை செய்திருப்பார், சிவாஜிகணேசன்.அதற்கு ஆதாரமே கிடைக்காது. குற்றவாளியே, 'நான் தான், என் மனைவியைக் கொலை செய்தேன்' என, வாக்குமூலம் அளிப்பதோடு படம் முடியும்.அதுபோல, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானோர், தாமே முன்வந்து, 'நாங்கள் தான் கொலை செய்தோம்' என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி சரணடைந்தாலன்றி, ஆறுமுகசாமி விசாரணை கமிஷனால் ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல முடியாது.
இத்தனை ஆண்டு விசாரணையில், அந்த கமிஷன் என்ன பெரிதாக கண்டுபிடித்து விட்டது? காலத்திற்கும், அரசு பணத்திற்கும் பிடித்த கேடு, இந்த விசாரணை கமிஷன்!வீண் விரயம் செய்யாமல், தா.கிருஷ்ணன்,ராமஜெயம், பாலன் ஆகியோர் வரிசையில், ஜெயலலிதாவையும் சேர்ந்து கொள்வது நலம்.
நோய் பரவும் வழியை அடைக்கலாமே!
ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனாவின் இரண்டு அலைகளிலும், நம் நாடு சிக்கி, பெரும் இழப்பை சந்தித்தது. மக்களின் அன்றாடவாழ்க்கை கேள்விக்குறியானது.பல்வேறு இன்னல்களை கடந்த மக்கள், இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதற்குள் வெளிநாடுகளில், மூன்றாவது அலை வீச துவங்கி விட்டது.
'ஒமைக்ரான்' என்ற பெயரில் வந்த மூன்றாவது அலையை தடுத்து நிறுத்துவதற்கு, தமிழகஅரசுக்கு, நிறைய வாய்ப்புகள் இருந்தன.வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு, விமான நிலையத்தில் முழுமையான பரிசோதனை நடத்தியிருந்தால், தமிழகத்திற்குள் ஒமைக்ரான் நுழைந்து இருக்காது. அதில் அலட்சியம்
காட்டியதால், தமிழகத்தில் தொற்று பரவத் துவங்கி விட்டது.முதலில், 'தமிழகத்தை பொறுத்தவரையில் யாரும் கவலைப்பட வேண்டாம்' என அரசு கூறியது. பின்,'ஒமைக்ரான் பரவ வாய்ப்பு குறைவு' என்றது. இப்போது, 'மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' எனக் கூறுகிறது.மூன்றாவது அலை, தமிழகத்தில் எப்படி நுழைந்தது?வெளிநாடு மற்றும் கேரளாவில் இருந்து, தமிழகத்திற்குள் வருவோரால் தான், தொற்று பரவியது.விமான நிலையத்திலும், கேரள எல்லையிலும் கெடுபிடி காட்டியிருந்தால், மூன்றாவது அலையை
தடுத்திருக்க முடியும்.ஆராய்ச்சியாளர்கள், 'தடுப்பூசி போட்டுக் கொள்வோரை, மூன்றாவது அலை தாக்காது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை' என தெரிவிக்கின்றனர்.எனவே, தமிழக அரசு தயவு செய்து, மக்களை மீண்டும் ஒரு ஊரடங்கு நிலைக்குள் தள்ளாமல் இருக்க இப்போதே வழி செய்ய வேண்டும்.
விமான பயணியர் அனைவருக்கும், தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரையும், இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.கேரள எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, 'தொற்று இல்லை' என்பது ஊர்ஜிதம் ஆன பின் தான், தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். கேரள எல்லையை இரவில் மூட வேண்டும்.
ஆட்கொல்லி புலி, ஊருக்குள் வருவதற்கு இருக்கும் ஒரே வழியை அடைக்காமல், மக்களை வீட்டிற்குள் முடங்கி இருக்க உத்தரவிடுவது போல, தமிழக அரசு செயல்படுகிறது.கொரோனா மூன்றாவது அலையில் தமிழகம் சிக்க கூடாது என்பதில், அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
இது ஆபத்தான விஷயம்!
சி.கார்த்திகேயன், சாத்துார்,விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழக அரசின் சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களை, வீடுகளுக்கு அருகே உள்ள பொதுவான இடத்தில் அமர வைத்து, தன்னார்வலர்கள் வழியே, 'டியூஷன்' எடுக்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், ஆபத்தான விஷயம்!
கல்வி என்பது, பள்ளி மற்றும் கல்லுாரி வழியே கிடைக்க வேண்டும். வீட்டில் கிடைப்பது, முழுமையான கல்வியாக இருக்க முடியாது.இந்த கொரோனா காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு காரணமாக, கல்வியின் தடம் மாறியதை,நாம் அனைவரும் உணருகிறோம்.ஆன்லைன் வழியே கற்றல், கற்பித்தல் பணியை மேற்கொள்வது சிரமம். அதனால் தான், பள்ளியை திறக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டியது. அதற்காக, கடுமையான விதி
முறைகளை அறிவித்தது.அதே தமிழக அரசு, 'இல்லம் தேடி கல்வி' எனக் கூறுவது, சரியானது அல்லவே!மன்னர் காலத்தில் குருகுலக் கல்வி, அரசவைக் கல்வி, ஜமீன்தாரியக் கல்வி, குலக் கல்வி என, பல நிலைகள் இருந்தன. இதை மாற்றி, சமத்துவமான கல்வி கிடைக்க, நம் முன்னோர் முயன்று, சாதித்துக் காட்டினர்.
தமிழகம், கல்வியில் சமூக மாற்றம் ஏற்படுத்தி புரட்சி செய்யும் நிலையில், இல்லம் தேடி கல்வி என்பது, நம் மாநிலத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.வகுப்பறை கல்வியே, மாணவரிடையே சமத்துவம், ஒழுக்கம், சகோதரத்துவம், குழு ஒற்றுமை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்க்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE