நடிகர் சிவகுமார்: முன் காலத்தில் மனிதன், ஆடு, மாடு போல தவழ்ந்து போய்கிட்டிருந்தான். அவனது முதுகுதண்டு, 180 டிகிரியில் இருந்தது. இதயம், நுரையீரல் எல்லாம் சம அளவில் இருந்தன. ஆகையால், வாய்க்காலில் தண்ணீர் போவது போல், ரத்த ஓட்டம் எளிதாக இருந்தது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் எழுந்து நிற்க ஆரம்பித்த பின், 'பம்பிங் ஸ்டேஷன்' கீழே போய் விட்டது. இதயமும், நுரையீரலும் கீழே வந்து மூளை மேலே போய் விட்டதால், புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக ரத்தத்தை, 'பம்ப்' செய்து மூளைக்கு அனுப்புகிறோம். அதனால் தான், 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே, நம் முன்னோர் சிரசாசனத்தை கண்டுபிடித்தனர். இதை தினமும், 3 நிமிடம் செய்தால் போதும்... கண்கள் பளபளப்பாக இருக்கும்; ஞாபக சக்தி அதிகமாகும். கண், காது, மூக்கு, வாய் என ஒவ்வொரு புலனையும் வலுப்படுத்த, தனித்தனி ஆசனங்கள் உள்ளன. யோகா கற்றுக் கொள்வது போல், ஆரோக்கியத்துக்கு நல்ல விஷயம் வேறு எதுவும் இல்லை.காலையில் பல் துலக்கியதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.மனிதன் உயிர்வாழ மிக முக்கியமானது, காற்று; அதற்கு பின் தண்ணீர்; பின், உணவு. மஹாத்மா காந்தி சாப்பிடாமல், 20 நாட்கள் இருந்துள்ளார். தண்ணீர் குடிக்காமல் இரண்டு நாட்கள் தாக்குபிடிக்கலாம்; ஆனால், சுவாசிக்காமல் இரண்டு நிமிடம் கூட உயிருடன் இருக்க முடியாது. பிராணாயாமம் என்று சொல்லக்கூடிய மூச்சுப்பயிற்சியை கட்டாயம் தினமும் செய்ய வேண்டும். உடற்பயிற்சியை விட மூச்சுப் பயிற்சி முக்கியம்.அதேபோல், உணவுப் பழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பரபரப்பாக இருந்த கால கட்டத்தில் கூட, 45 நாட்கள் ஷூட்டிங் போனால், அடுத்த, 10 நாட்கள் கட்டாயம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்வேன்; அதில் எப்போதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. சாப்பாடு விஷயத்திலும் ஒழுங்கை கடைப்பிடிப்பேன். எங்கள் வீட்டில் அம்மா பால் கறந்ததும், அப்படியே வாங்கி அரை லிட்டர் குடித்து விடுவேன். தயிர், வெண்ணெய் என பாரபட்சம் இல்லாமல் சாப்பிட்டோம்.நம் உடம்பிற்கு எது தேவையோ அதை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்; எது தேவை இல்லையோ, அதை கறாரா ஒதுக்கி விட வேண்டும். நமக்கு உடம்பு மிக முக்கியம். அது ஆரோக்கியமாக இருந்தால் தான் எதையும் செய்ய முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE